நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே பள்ளிப் பருவத்தின் போது சிறார்கள் வாகனங்களை இயக்குவதால் ஏற்படுத்தும் விபத்துகள், அதிர்ச்சியடையச் செய்கின்றன.
அப்படி ஒரு சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது. அம்மாவட்டத்தின் ஜி.நாகமங் கலத்தைச் சேர்ந்த கிரி(17) தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, நண்பர்கள் அஜய்(15), ராகவன்(14) ஆகியோருடன் சென்ற நிலையில் மூவருமே சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
இதேபோல், இதற்கு முன்னதாக நடந்த பல சம்பவங்களில், சிறார்கள் இயக்கிய வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் தவறிழைக்காத பலரும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் பெறாமல் 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாது காவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராத மும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க இடமிருக்கிறது.
மேலும், 25 வயது வரை சம்பந்தப்பட்ட சிறாரால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது என்பன உள்ளிட்ட 5 தண்டனைகள் வழங்கப்படவும் அச்சட்டத்தில் இடமிருக்கிறது.
ஆனால் இச்சட்டத்தை போக்குவரத்து காவல்துறையினர் அதிகமாக கையிலெடுப்பதில்லை. இச்சட்டப்படி நடவடிக்கை எடுப்பது எப்போதாவது தான் நடக்கும் அதிசய நிகழ்வாகவே இன்றைக்கு இருக்கிறது.
போக்குவரத்து சிக்னலில் காவலர் இல்லை என்றால் ரெட் சிக்னல் காட்டினாலும் விதிமீறி தங்கள் வாகனங்களை பலரும் இயக்குவதைப் பார்த்திருக்கிறோம்.
ஹெல்மெட் அணியாமல், உரிமம் இல்லாமல், ஆர்சி புக்&இன்ஸ்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் நிச்சயம் எனத் தெரிந்தும் தினமும் இந்த விதிகளை மீறி தினம்தினம் பெற்றோர்கள், பெரியவர்கள் பிடிபடுகிறார்களே, அப்படியிருக்க சிறார்களை மட்டுமே குறைசொல்லிப் பயனில்லை. பெற்றோர்கள் போக்குவரத்து விதிமீறி வாகனங்களை இயக்கக் கூடாது. அப்போது தான் பிள்ளைகளை அவர்களால் கண்டிக்க முடியும்.
வாகனங்களை இயக்க விடாமல் சிறார்களைத் தடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. சிறு வயதில் இருந்தே கண்டிப்புடன் குழந்தைகளை வளர்த்தால் மட்டுமே வளரிளம் பருவத்தில் பெற்றோரின் வார்த்தைகளுக்கு அவர்கள் மதிப்பளிப்பார்கள். தவறுகளை குழந்தைகளுக்கு தெளிவாகக் கூறி புரிய வைக்கும் மனதிடம் பெற்றோருக்கு இருக்க வேண்டும்.
அதே நேரம், பெற்றோரால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. பாடத்திட்டம், ஆசிரியர், சமூகம், ஊடகம் என அனைத்துத் தரப்பிலும் விழிப் புணர்வு வாயிலாக பங்களிப்பு இருக்க வேண்டும்.
குறிப்பாக நம் நாட்டைப் பொறுத்தவரை காவல் துறை சாட்டையை இன்னும் வேகமாக சுழற்றினால் மட்டுமே அதாவது பெற்றோர் மீதான நடவடிக்கையை அதிகரித்தால் மட்டுமே சிறார் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க முடியும். அதனால் ஏற்படும் விபத்துகளையும் தடுக்க முடியும்!