சங்கரன்கோவிலில் தலைமை அலுவலகமும் ஈரோட்டில் செயலர் அலுவலகமும் செயல்படும் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் டி.எஸ்.ஏ.சுப்ரமணியம், தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:
தமிழ்நாடு முதல்வர் விஜய், அண்ணன் சீர் திட்டம் மூலம், திருமணம் செய்ய உள்ள பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் எட்டு கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
முதல் கட்டமாக 60 ஆயிரம் தங்க நாணயங்கள் மற்றும் 60 ஆயிரம் பட்டுப் புடவைகள் கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் கோரி உள்ளது.
தமிழக கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உள்ள பட்டுப்புடவைகளை குறிப்பாக காஞ்சிபுரம், திருபுவனம் போன்ற சொசைட்டிகளில் இருப்பில் உள்ள திட்ட மதிப்பீட்டுக்கு ஏற்ப உள்ள சேலைகளை அரசு கோ ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்து சமூக நலத்துறை டெண்டர் மூலம் கொடுக்கும் பட்சத்தில், இருப்பிலுள்ள உற்பத்தி செய்துள்ள பட்டு சேலைகளுக்கு அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு உண்டான தொகை விடுவிக்கப்பட்டும், இனிவரும் காலங்களில் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பினை அண்ணன் சீர் திட்டம் மூலம் திருமணப் பெண்களுக்கு கொடுக்கப்படும் பட்சத்தில் அனைத்து சேலைகளையும் உற்பத்தி செய்து கொடுப்பதன் மூலம் கைத்தறி பட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரமும், அதனை சார்ந்துள்ள கூட்டுறவு சங்கங்களும் லாப நோக்கத்துடன் சிறப்பாக செயல்பட்டு தமிழக அரசுக்கு பெரு மதிப்பை பெற்றுத்தரும்.
இலவச வேட்டி, சேலை திட்டம், முதியோர் ஓய்வூதிய வேட்டி சேலை திட்டம் மற்றும் பள்ளி சீருடை திட்டம் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து வரும் அரசு,
இனிவரும் காலங்களில் திருபுவனம், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆரணி போன்ற சுற்று வட்டார பகுதியில் உள்ள பட்டு உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அண்ணன் சீர் திட்டத்திற்கு உண்டான பட்டுப் புடவைகளை நமது கைத்தறி துறை சார்பில் நேரடியாகவும் அல்லது டெண்டர் மூலம் கொடுக்கும் பட்சத்தில் அரசின் கோ ஆப்&டெக்ஸ் நிறுவனமும் லாபத்துடன் செயல்பட வழிவகை ஏற்படுத்தும்.
தற்போது உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பட்டு சேலைகள் வெவ்வேறு நிறங்களில் இருந்தாலும், இருப்புகளை கொள்முதல் செய்தவுடன் இனிவரும் காலங்களில் அண்ணன் சீர் திட்டம் மூலம் திருமணப்
பெண்களுக்கு கொடுக்கப்படும் பட்டுப் புடவைகளை முதல்வர் அவர்களின்
விருப்பத்திற்கு ஏற்ப வண்ணம் மற்றும் திடத்தில் உற்பத்தியை மேற்கொள்ள வழிவகை ஏற்படுத்தும்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அண்ணன் சீர் திட்டம் மூலம் திருமணப் பெண்களுக்கு கொடுக்கப்படும் பட்டுச்சேலைகளை கைத்தறி பட்டு நெசவாளர்களிடம் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை ஏற்படுத்தி
கொடுக்குமாறு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



