fbpx
Homeபிற செய்திகள்நாவலாசிரியை ஜெய்சக்தி எழுதி ‘பிற்பகல்’ நாளிதழில் வெளியான கட்டுரைகள்-‘வாழ்க்கை வசப்படும்’ புத்தக வெளியீட்டு விழா

நாவலாசிரியை ஜெய்சக்தி எழுதி ‘பிற்பகல்’ நாளிதழில் வெளியான கட்டுரைகள்-‘வாழ்க்கை வசப்படும்’ புத்தக வெளியீட்டு விழா

கோவை பிற்பகல் நாளிதழில் பிரபல நாவலாசிரியை ஜெய்சக்தி வாரந்தோறும் எழுதி வந்த 28 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வாழ்க்கை வசப்படும் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

நம்பிக்கையூட்டும் சமூக மற்றும் விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொகுப்பான இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள கீதா ஹாலில் நடைபெற்றது. ஏ.கவிதா இறை வணக்கம் பாடினார். கவிஞர் சிதம்பரநாதன் தலைமை தாங்கி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னர் கோவை சாயிபாபா கோவில் பகுதியில் ஈ.வி.கே.சம்பத் பங்கேற்ற கூட்டத்தில் ஜெய்சக்தி சிறுமியாக இருந்தபோது பேசி அனைவரையும் கவர்ந்ததாகவும் பின்னர் ஈ.வி.கே.சம்பத் பேசும் போது அந்த சிறுமி இன்னும் கொஞ்சநேரம் பேசினால் நன்றாக இருந்திருக்கும் என புகழ்ந்ததையும் நினைவு கூர்ந்தார்.

மேலும் பிற்பகல் & ஆப்டர்நூன் பத்திரிகைகளின் நிறுவனர் சாலமன் அப்பாதுரை, நவ இந்தியா, ஓம் சக்தி இதழ்களில் பணிபுரிந்ததை நினைவுகூர்ந்து அவரோடு தனக்கிருந்த நட்பையும் கவிஞர் சிதம்பரநாதன் எடுத்துரைத்தார்.
ஆர்.ஜோதி வரவேற்றுப் பேசினார். விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் முன்னிலை வகித்தார்.

அவர் பேசுகையில், ஜெய்சக்தி எழுதிய இரு புத்தகங்களை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டார். வாசகர்களை வாசிக்கச்செய்வது கடினம். ராஜேஷ் குமார், சுஜாதா, ஜெய்சக்தி இவர்களெல்லாம் வாசகர்களை வாசிக்க வைத்தார்கள் மேலும் தற்போது வாசிப்பு பழக்கம் மிகவும் குறைந்து விட்டதாகவும் கைபேசிகள் வந்தபிறகு புத்தகங்கள் விற்பனை குறைந்து விட்டதாகவும் கூறிய மு.வேலாயுதம், புத்தகங்களை அனைவரும் வாங்கிப்படிக்க
வேண்டும், வாங்கி பிறருக்குப் பரிசளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர் வாழ்க்கை வசப்படும் நூலை பிற்பகல் நாளிதழின் இயக்குனர்கள் ஆதம் அப்பாதுரை, டேவிட் அப்பாதுரை ஆகியோர் வெளியிட்டனர்.
முதல் பிரதியை தொழிலதிபர் என்.சிவக்குமார் பெற்றுக் கொண்டார். மேலும் நூல்களை பொறியாளர் கணேசன், ஓய்வு பெற்ற தலைமை
ஆசிரியர் கே.ஆறுச்சாமி, என்.ராமலிங்கம், பாரதி ஜூவல்லரி டி.பாரதி ஆகி யோருடன் வாசகர்களும் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் க.முருகேசன், ராமகிருஷ்ணா வித்யாலயா தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு) பேராசிரியர் விஸ்வநாதன், எழுத்தாளர் ஜெயா வெங்கட் ராமன், தமிழாசிரியை பிரேமாவதி, எழுத்தாளர் சுப் ரபாரதி மணியன், கவிஞர் மானூர் புகழேந்தி, கவிஞர் உமா மகேஸ்வரி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

நூலின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்து கவிஞர் கே.ஜி.ராஜேந்திர பாபு, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் (ஓய்வு) முனைவர் கா.மு.சேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து நூலாசிரியர் ஜெய்சக்தி ஏற்புரை நிகழ்த்தினார்.
அப்போது ஜெய்சக்தி பேசியதாவது:

முதலில் சிறுகதைகளைத்தான் எழுதி வந்தேன். மங்கையர் மலர், தினகரன் போன்ற பல பத்திரிகைளில் வெளிவந்தன. பிறகு புதினங்களுக்குத்தாவினேன். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே கேட்ட படிக்கிற மாதிரி கொடுங்களேன் என்ற கருத்தை எடுத்துக் கொண்டு பெண்களை ஈர்க்கிற மாதிரி கதைகளைக் கொடுத்தேன்.

தீவிர எழுத்தாளர்கள் சொன்னதைத் தான் நானும் எனது நாவல்களில் சொன்னேன். ஆனால் வாசகர்களை ஈர்க்கும் வகையில் அமைத்துக் கொண்டேன்.
சிறுவர்களுக்கான புத்தகம், மொழிபெயர்ப்பு புத்தகம், சிறுகதைகள் தொகுப்பு, கட்டு ரைப் புத்தகங்கள் என 110 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அதில் 97 நாவல்களும் அடங்கும். இரு புத்தகங்களை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வாழ்க்கை வசப்படும் புத்தகத்தில் சொன்னதெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தான். ஆனால் அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நிறைய மாற்றங்கள் ஏற்படும். புத்தகங்களால் நான் பெரிதாக சம்பாதிக்கவில்லை. ஆனால் எனது மாணவன் சிவகுமார் போன்ற பலரது அன்பைச் சம்பாதித்தேன்.

வாசகர்களின் அன்பை சம்பாதித்தேன். எழுத்து என்னை இயக்குகிறது. வாசகர்கள் ஊக்குவிக்கிறார்கள். பலரும் பீட்பேக் கொடுத்து எழுதத் தூண்டுகிறார்கள்.
பிற்பகல் நாளிதழ் நிர்வாகத்தினருக்கு என் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

ஹரீஷ் சின்னராஜன் மற்றும் சண்முகதேவி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினர். ஹரீஷ் சின்னராஜன் நன்றி உரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img