fbpx
Homeதலையங்கம்குற்றம் சாட்டப்பட்டவரே அமைத்த விசாரணைக் குழு: நியாயம் கிடைக்குமா?

குற்றம் சாட்டப்பட்டவரே அமைத்த விசாரணைக் குழு: நியாயம் கிடைக்குமா?

சென்னையில், ஒன்றிய அரசின் ஆளுமையின்கீழ் கலாஷேத்ரா நிறுவனம் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் சிலர் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகளை அடுக்கி அங்கு பயிலும் மாணவிகள், போராட்டம் நடத்தினர்.
புகார்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கூறினார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில பேராசிரியர்களை காவல்துறையினர் தேடினர். தலைமறைவான ஒரு துணை பேராசிரியரை கைது செய்து, விசாரணை நடத்தத் தொடங்கிய நிலையில், திடீரென்று கலாஷேத்ரா அறக்கட்டளை வாரியம் சார்பில், ஒரு விசாரணைக் கமிஷனை அவசர அவசரமாக அறிவித்துள்ளனர்.

எந்த நிர்வாகத்தின்மீது குற்றச்சாட்டோ, அந்த நிர் வாகமே தனக்குத்தானே விசாரணைக் கமிஷன் அமைத்துக் கொண்டால் எப்படி நியாயம் கிடைக்கும்? புரியவில்லையா?

அந்த விசாரணை கமிஷனின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி கண்ணன் என்பவரை நியமித்துள்ளது கலாஷேத்ரா அறக்கட்டளை.
இந்த ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்க பலத்த எதிர்ப்பு இருந்தபடியால், பிறகு பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டவர்.

அங்கிருந்து ஓய்வுபெற்று இங்கு திரும்பி சில ஆண்டுகள் ஆன நிலையில், ஆர்எஸ்எஸ் மீது ஈடுபாடு கொண்ட ஒருவர் தலைமையில், விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது சரியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் காவல்துறை, அதன் விசாரணை நடவடிக்கையை முழு வீச்சில் நடத்தி, தலைமறைவு குற்றவாளிகளைக்கூட கண்டுபிடித்து சிறையில் அடைத்துள்ள நிலையில், இப்படி ஒரு விசாரணை கமிஷன் அறிவித்திருப்பது பல வகையிலும் பெருத்த சந்தேகத்தை அல்லவா பொதுமக்களுக்கும், பாதிக்கப் பட்ட மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் உருவாக்குகிறது?

தமிழ்நாடு அரசின் மகளிர் ஆணையத் தலைவர் குமாரியின் தலைமையில், இதுகுறித்த விசாரணையை நடத்தி முடித்து, அறிக்கையையும் அரசுக்குக் கொடுத்துள்ளது.

சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுக்கு உரியது; தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புப்படி, திட்டவட்டமாக காவல்துறை குற்றவாளிகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிடும் நேரத்தில், அதனை நீர்த்துப் போகவோ அல்லது தண்டனைகளிலிருந்து குற்றமிழைத்தோரை காப்பாற்றிடவோ இப்படிப்பட்ட நடவடிக்கை என்பதாகவும் ஒரு பலத்த கேள்வியும், சந்தேகமும் எழுகின்றன.
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை திசை திருப்பி – அந்தப் புகாரினை ஒன்றுமில்லாததாக்கி, ‘‘வெள்ளையடிக்க மறைமுக ஏற்பாடு தான் இந்த கமிஷன் நியமனம் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்தத் திடீர் ‘மூவர்’ கமிஷன் நியமனம் என்பது பிரச்சினையைத் திசை திருப்பி, குற்றவாளிகளைத் தப்பிக்கவிட ஓர் உபாயமோ என்பதே பரவலாக எழுந்துள்ள சந்தேகம் ஆகும்!

தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தட்டும்!

படிக்க வேண்டும்

spot_img