fbpx
Homeதலையங்கம்நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கட்டும்!

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கட்டும்!

நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில்தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா முழுவதும் இன்றளவும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.

நாடு விடுதலைக்குப் பின்னர் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 1980, 1990களில் இடஒதுக்கீடு விவகாரம் முழு வீச்சாக உயிர்த்தெழுந்த போது இந்த கோரிக்கை தீவிரமடைந்ததது.

இதன்பின்னர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. ஆனால் அந்த புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை; குழப்பமாக இருக்கிறது என தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு தெரிவித்து வருகிறது.

இந்த பின்னணியில் பீகாரில் ஆளும் ஜேடியூ &- ஆர்ஜேடி- & காங்கிரஸ் கூட்டணி அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. அண்மைக் காலங்களில் நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய முதல் மாநிலம் பீகார். ஆனால் இதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன.

இந்நிலையில் தற்போது பீகார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி. இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13%; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%; ஒட்டுமொத்தமாக பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14%; பொதுப் பிரிவினர் 15.52%; தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%.; பழங்குடி இன மக்கள் 1.69% மத ரீதியான கணக்கெடுப்பு விவரம்: இந்துக்கள் 81.99%; முஸ்லிம்கள் 17.7%; கிறிஸ்தவர்கள் 0.05% ; சீக்கியர்கள் 0.01%; பவுத்தர்கள்- 0.08% ; இதர மதத்தினர் 0.12% ஜாதி அடிப்படையில்.. : யாதவர்கள் (துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஜாதி) : 14%; குஷ்வாஹா 4.27%; பிராமணர்கள் 3.65% ; முஷாகர்- 3% குர்மி (நிதிஷ்குமார் ஜாதி) 2.87% ; பூமிகார்- 2.86%

தற்போது பீகாரில் பட்டியல் சமூகத்திற்கு 16 % பழங்குடியினருக்கு 1% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 12% பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 63 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்டோர் 30 சதவீத இடத்தை மட்டுமே இப்போது பெறுகின்றனர்.

15.5% உள்ள பொதுப் பிரிவினர் 50% இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்களைப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இது மாபெரும் சமூக அநீதியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பீகாரைச் சுட்டிக்காட்டி, இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. குரலெழுப்பி உள்ளார்.

இனிமேலும் சாக்குப் போக்கு சொல்லாமல் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முன்னெடுத்துள்ளார். தமிழ்நாடு அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரி உள்ளார்.

குறைந்த அளவில் உள்ள உயர்ஜாதி பிரிவினர் மீது மட்டுமே ஆளும் பாஜக அரசு அக்கறை கொண்டுள்ளது. அதனால் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் முயற்சிக்கு ஒன்றிய அரசு தடையாக இருந்து வருகிறது. அந்த தடையை உடைக்கும் அஸ்திரமாக பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் உருவெடுத்துள்ளது.

இனி பிற்படுத்தப் பட்டோரின் குரல் ஓங்கி ஒலிக்கும். சமூக நீதியைக் காப்பாற்ற நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே ஆக வேண்டும் என்ற நெருக்கடி ஒன்றிய பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
விடிவு காலம் பிறக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img