நம் நாட்டில் முக்கிய நகரங்கள் சிலவற்றில் பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை மாநகரிலும் பைக் டாக்ஸிகள் இயக்கம் ஜரூராக நடந்து வருகிறது. பகுதிநேர வேலை வேண்டுவோர், அவ்வப்போது பணம் தேவைப்படுவோர் தங்கள் சொந்த இருசக்கர வாகனங்களை தனியார் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டு பைக் டாக்ஸி ஓட்டுநர்களாக இயங்குகின்றனர்.
செல்போன் செயலி மூலம் நாம் போக வேண்டிய இடத்தைப் பதிவு செய்தால் நாமிருக்கும் இடத்திற்கே வந்து அழைத்துக் கொண்டு, போக வேண்டிய இடத்திற்கே கொண்டு போய் விட்டு விடுவார்கள்.
கால் டாக்ஸி, ஆட்டோ வாடகையை விட பைக் டாக்ஸி கட்டணம் மிகக்குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. ஆட்டோவில் பயணம் செய்து ஓரிடம் செல்ல 300 ரூபாய் செலவாகிறது என்றால் பைக் டாக்ஸியில் 100 ரூபாய் கூட ஆகாது. ஆனால் விபத்து ஏதேனும் நேர்ந்தால் பைக் டாக்ஸியில் பயணிப்போருக்கு விபத்துக் காப்பீடு கிடைக்காது.
இந்த பைக் டாக்ஸிகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆட்டோ ஒட்டுநர்கள் தான். பைக் டாக்ஸிகள் அனைத்தும் தனியாரால் உரிய அனுமதியின்றியே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு எந்த அனுமதியும் தரவில்லை.
போக்குவரத்துத் துறையினரும் காவல் துறையினரும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கின்றனர். கோவையில் மே மாதம் மட்டும் 34 பைக் டாக்ஸிகள் பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணம், விரைவான பயணம், போக்குவரத்து நெரிசலை எளிதில் கடப்பது போன்ற காரணங்களால் பைக் டாக்ஸி வசதியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம் கோவை வந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பைக் டாக்ஸிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் அதனை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசு செய்ய வேண்டியதென்ன? ஒன்று…பைக் டாக்ஸியை அடியோடு தடுக்க வேண்டும். இன்னொன்று… பைக் டாக்ஸி இயக்கத்தை முறைப்படுத்தி அனுமதிக்க வேண்டும்.
அதே நேரத்தில் பொதுமக்கள் பைக் டாக்ஸியைப் பயன்படுத்தப் பழகி விட்டனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பைக் டாக்ஸி இயக்கத்தை முறைப்படுத்தி அனுமதி அளிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நியாயமான கோரிக்கை.
தமிழக அரசு யோசிக்கலாமே!



