fbpx
Homeதலையங்கம்அழகான லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்வோம்!

அழகான லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்வோம்!

பிரதமர் மோடி ஜனவரி 4 ஆம் தேதி லட்சத்தீவுகளின் படங்களைப் பகிர்ந்துகொண்டு, சுற்றுலாப் பயணிகள் இத்தீவுகளுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்த பிறகு, மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

இருப்பினும், இந்த விவகாரத்தை குளிர்விக்கும் வகையில், ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மாலத்தீவு அரசு, அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்ததுடன், இதுபோன்ற செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியது.

பிரதமர் மோடியின் வேண்டுகோளைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் இனி மாலத்தீவுக்குப் போகாமல் லட்சத்தீவுக்குச் செல்ல வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கூறத் தொடங்கினர்.

இந்தியாவில் உள்ள சில பொதுவான பயனர்கள் மற்றும் பிரபலங்களும் சர்ச்சையில் குதித்து மாலத்தீவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தனர்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து மட்டுமே லட்சத்தீவின் அகத்தி நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. கொச்சி- அகத்தி, அகத்தி- கொச்சி இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த வாரம் லட்சத்தீவு பயணத்தின் போது அழகிய தீவின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் இந்தியர்கள் மட்டுமல்லாது சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனம் லட்சத்தீவு பக்கம் திரும்பியுள்ளது.

குறிப்பாக, இந்திய சுற்றுலாப்பயணிகள் லட்சத்தீவை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரையில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், லட்சத்தீவு பயணத்தை எளிமையாக்குவதற்காக மின்னணு நுழைவுச் சீட்டு இனி முற்றிலும் இணைய வழியில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகத்தி விமான நிலையத்தை பெரிதாக்கவும், மினிக்காய் தீவில் ஏர்பஸ் 320 மற்றும் போயிங் 737 ரக விமானங்கள் வந்து செல்வதற்காக புதிய பசுமை விமான நிலையமும் கட்டப்பட உள்ளது.

இதன் மூலம் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து லட்சத்தீவுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படும். இந்த விமான நிலையத்தை ராணுவமும் பயன்படுத்திக் கொள்ளும்.

இதற்கிடையில், சுஹேலி மற்றும் கமாட் தீவுகளிலும் நவீன ஓட்டல்கள், ரெசார்ட்டுகள் கட்ட பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அகத்தி மற்றும் கவரட்டி தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான கூடாரங்களை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக, பிரதமர் மோடி வருகையால் லட்சத்தீவு புதுப்பொலிவு பெறுகிறது. நமது நாட்டின் லட்சத்தீவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரவேண்டும் என அழைப்பதற்கு பிரதமர் மோடிக்கு முழு உரிமை உண்டு. இதனை இன்னொரு நாடு விமர்சிப்பது என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.

லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல தயாராவோம், வாருங்கள்!

படிக்க வேண்டும்

spot_img