fbpx
Homeதலையங்கம்சிறுவர், சிறுமிகள் டவுசர் அணிய தடை - இது என்ன கொடுமை?

சிறுவர், சிறுமிகள் டவுசர் அணிய தடை – இது என்ன கொடுமை?

சிறுவர், சிறுமியர் (முழு பேன்ட் உள்பட) டவுசர் அணியக்கூடாது என்று பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஒரு கிராமப் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் பாக்பத் என்ற பகுதியில் உள்ள பட்டி மெஹர் என்ற அந்தக் கிராமத்தில் கடந்த டிச.27-ம் தேதி கிராம பஞ்சாயத்து நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறுவர், சிறுமிகள் டவுசர் அணியக்கூடாது என்றும், செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் டவுசர் அணிவதால் கலாச்சாரம் சீர்குலைவதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு சிறுவர்கள் குர்தாவும், சிறுமிகள் சல்வாரும் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கிராம பஞ்சாயத்தின் இந்த தடையை யாரேனும் மீறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் புதியபுதிய தொழில்நுட்பங்களால் முன்னேறிச் செல்லும் வேளையில், சிறுவர், சிறுமியர் ஸ்மார்ட் போனில் சமூக வலைதளங்களை பார்க்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருந்தால் கூட கொஞ்சம் ஏற்கலாம். 18 வயது வரை செல்போன்களையே பயன்படுத்தக்கூடாது என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

வெளியில் சென்றிருக்கும் பெற்றோரை அவசரத் தேவைக்கு எப்படி சிறுவர், சிறுமியர் தொடர்பு கொள்வார்கள்? இந்தக் காலக்கட்டத்தில் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் கற்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க தடை விதிப்பது அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

எல்லாவற்றிற்கும் மேலாக சிறார்கள் டவுசர் அணியக்கூடாது என்று ஒரு கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக உத்தரபிரதேச மாநில அரசு திகழ்கிறது என்று நேற்று கூட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மார்தட்டி இருந்தார். எனவே, கிராம பஞ்சாயத்தின் தீர்மானத்தை ரத்து செய்வதோடு, இதுபோன்ற வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் பிற்போக்கான நிகழ்வுகள் உத்தரபிரதேசத்தில் நடைபெறாதபடி முதலில் அவர் தடுக்க வேண்டும்.

21-ம் நூற்றாண்டில் இருக்கும் சூழலிலும் நாட்டின் வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் மிகுந்த வளர்ச்சியடைந்த பகுதிகளாக கருதப்படுகிறது.

தென் மாநிலங்களில் முற்போக்கு சிந்தனைகள், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் நாட்டிற்கு முன்னோடியாக விளங்குகிறது.

ஆனால் வட மாநிலங்கள் பின்னோக்கியே நகர்கிறது. அதற்கு ஓர் உதாரணம் தான் இந்த உ.பி. கிராம பஞ்சாயத்து தீர்மானம்.

இதுபோன்றவை தென் மாநிலங்களில் ஒருபோதும் நடக்க அனுமதிக்கப்பட மாட்டாது. வட மாநிலங்களில் மட்டுமே சாத்தியம்!

படிக்க வேண்டும்

spot_img