கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த வேளையில் அதை சீர்குலைக்கும் வகையில் சில வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தான் இம்மாதிரியான தாக்குதல்கள் அதிகளவில் நடைபெற்றுள்ளன.
இதோ அந்த பட்டியல்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ள மெக்னடோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களை மதவாதக் கும்பல் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம், நல்பாரியில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் நுழைந்து, கிறிஸ்துமஸ் விழாவிற்கு உபயோகித்த பொருட்களை பஜ்ரங் தளத்தினர் தீயிட்டு எரித்துள்ளனர்.
ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தாத்தா அணியும் தொப்பிகளை விற்பனை செய்த வியாபாரிகள் இந்து அமைப்பினரால் மிரட்டப்பட்டனர். டெல்லியில் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்த பெண்களை பஜ்ரங் தளத்தினர் விரட்டியடித்தனர்.
ராஜஸ்தானில் உள்ள துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள பிச்சிவாரா கிராமத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயத்தில் அண்மையில் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்திற்குள் புகுந்த நகர பாஜக துணைத் தலைவர் அஞ்சு பார்கவா ரகளையில் இறங்கினார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற பார்வையற்ற பெண்ணை அவர் தாக்கிய வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலானது. அங்குள்ள மற்றொரு தேவாலயத்திற்குள் கடந்த வாரம் அத்துமீறிய இந்து அமைப்பினர் அங்கிருந்தவர்கள் மீது நாற்காலிகளை தூக்கிவீசி வன்முறையில் இறங்கினர்.
சத்தீஸ்கரில் கிறிஸ்தவர் ஒருவரின் இறுதி சடங்கில் பிரச்னை எழுப்பிய இந்துத்துவா அமைப்புகள் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை சூறையாடி, தீக்கிரையாக்கினர்.
இவையெல்லாமே பாஜக ஆளும் மாநிலங்களில் அரங்கேறிய நடக்கக்கூடாத சம்பவங்கள். இதேபோல நாடு முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடந்த ஓராண்டில் 600 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக ஐக்கிய கிறிஸ்தவ கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின் போது இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, உலக அளவில் விவாதப்பொருளாகி இருக்கிறது. அதோடு கிறிஸ்தவர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இந்த தொடர் சம்பவங்களுக்கு தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தபடி உள்ளனர்.
பண்டிகை காலங்களில் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வன்முறை செயல்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி செய்த மதச்சார்பின்மை, மத சுதந்திரம், சமத்துவம் ஆகிய அடிப்படை மதிப்புகளுக்கு நேரான சவாலாகும்.
இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாகக் கண்டறிந்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் எதிர்காலத்தில் மதசார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவிற்கு பேராபத்தாகி விடும்!



