Homeதலையங்கம்மகத்தான வெற்றியை ருசித்த ஆம்ஆத்மி!

மகத்தான வெற்றியை ருசித்த ஆம்ஆத்மி!

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையில் வெளியாகி இருக்கிறது. 131 வார்டுகளில் வென்று மாநகராட்சியை தன்வசப்படுத்தி இருக்கிறது ஆம்ஆத்மி. 99 இடங்களைப் பிடித்து பாஜக படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக பாஜக கையில் இருந்த டெல்லி மாநகராட்சியை, உதயமாகி 10 ஆண்டுகளே ஆன ஆம்ஆத்மி மிக எளிதாக கைப்பற்றி இருப்பது சாதாரண விஷயமல்ல; இமாலய வெற்றி. இது ஒரு சரித்திர சாதனையாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பெரிய கட்சியான பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தேர்தல் முடிவுதான் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர். அதனால் தான் பாஜகவுக்கும் ஆம்ஆத்மிக்கும் கவுரவப் பிரச்னையாக உருவெடுத்தது.

இதில், ஆம்ஆத்மி வெற்றி பெற்று, அதனை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. இந்த தேர்தலில் பாஜக வீழ்ச்சியடைய பாஜகவின் மாநகராட்சி நிர்வாகத்தில் ஊழல் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பஞ்சாப் ஆம்ஆத்மி கட்சி முதல்வர் பகவந்த் மான் சொன்ன கருத்து கவனிக்கத்தக்கதாக உள்ளது. பாஜகவின் வெறுப்பு அரசியலை டெல்லி மக்கள் விரும்பவில்லை என்று அவர் சொல்லி இருக்கிறார்.

துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது, அமைச்சர் கைது, சிபிஐ & அமலாக்கத்துறை தொடர் சோதனை போன்ற நடடிவடிக்கைகள் மூலம் ஆம்ஆத்மியை பலவீனப்படுத்தி விடலாம் என பாஜக போட்ட கணக்கு தப்பாகி இருக்கிறது.

இதெல்லாம் மக்கள் மனதில் பாஜக மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்து விட்டது என்பதே உண்மை. இதைத் தான் சூசகமாகக் கூறி இருக்கிறார், முதல்வர் பகவந்த் மான்.

இந்நிலையில் இன்று நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், சில தொகுதிகளை ஆம்ஆத்மி கைப்பற்றி அங்கும் தடம் பதித்து விட்டது.

எது எப்படியோ, ஜனநாயக நாடான இந்தியாவில் ஆட்சி மாற்றமும் அதிகார மாற்றமும் அடிக்கடி நடந்து வருவது தான். அது தான் டெல்லியிலும் நடந்திருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம் தான்.

மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி உலகின் தலைசிறந்த நகரமாக டெல்லியை மாற்றிக் காட்டுவோம் என ஆம்ஆத்மி சூளுரைத்திருக்கிறது. செய்து காட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img