ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ் ஆதரவு வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளார். இதன்மூலம் கட்சியை கைப்பற்றி விடலாம் என்ற அவரது நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் இது பாரதிய ஜனதா கட்சியையும் வலுப்பெற செய்துள்ளது. ஏனெனில் எடப்பாடி பழனிசாமி கட்சியுடன் கூட்டணி வைக்க இது உதவுகிறது.
மேலும், ஈரோடு இடைத்தேர்தலிலும் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் இபிஎஸ் குழு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுவதை எதிர்க்க வேண்டாம் என ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார்.
முதலில் பாஜகவுக்கு ஆதரவாக மட்டுமே வேட்பாளரை வாபஸ் பெறுவேன் என்று கூறிய ஓபிஎஸ், இரட்டை இலை சின்னம் கைவிட்டுப் போன அன்று மாலையே வேட்பாளரை வாபஸ் பெற்றார். முன்னதாக, ஜூலை மாதம் இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது கட்சியின் கட்டுப்பாட்டை ஓபிஎஸ் இழந்தார்.
அங்கு கூடியிருந்த அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் இபிஎஸ்&ஐ தேர்ந்தெடுத்தனர். இருவருக்குமிடையேயான தனது இக்கட்டான சூழ்நிலையை பாஜக தற்போது முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக முயன்ற போதிலும் அதனை நடத்திக்காட்ட முடியாமல் போய்விட்டது. யாருக்கு ஆதரவு? என்ற கேள்வி எழுந்தபோதெல்லாம் இருவரும் இணையவேண்டும் எனக் கூறி நடுநிலையாக நிற்பது போன்றே பாஜக காய் நகர்த்தி வந்தது.
பாஜகவுக்கு வேலைகொடுக்காமல் உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை பிரித்து முடிவுரை எழுதி விட்டது. இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலையை வழங்கி இபிஎஸ் மட்டுமல்ல அண்ணாமலைக்கும் சேர்த்தே தேர்தல் ஆணையம் தடையில்லா நல்வழியைக் காட்டி விட்டது.
அதே நேரத்தில் இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ்ஸுக்கு எந்த தயவையும் நீட்டிக்கும் மனநிலையில் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசை ஆதரித்து பிரசாரம் செய்ய அவர் ஒருவேளை நினைத்தாலும் அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்புதான்.
அதிமுகவில் ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு வந்தபோதிலும் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் போர்க்கொடி உயர்த்தியதால் இதுவரை ஓபிஎஸ் தாக்குப்பிடித்து வந்தார்.
ஆனாலும் தமக்கு இன்னும் சில சண்டைகள் மீதம் இருப்பதாகக் காட்டுவதற்கான கடைசி முயற்சியாக, ஓபிஎஸ், ஈரோடு தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட ஈரோடு வேட்பாளர் செந்தில் முருகனை ஈரோடு மாவட்ட கட்சி அமைப்பு பொறுப்பாளராக நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆக, ஓபிஎஸ் திக்கு தெரியாத காட்டில் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஒளிமயமான பெருவழியில் இபிஎஸ் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
அவரோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ற மனக்கணக்கோடு அண்ணாமலையும் பயணப்பட தயாராகி விட்டார்!