fbpx
Homeதலையங்கம்அதிமுக கூட்டணி முறிவு- பாஜக கதி என்னவாகும்?

அதிமுக கூட்டணி முறிவு- பாஜக கதி என்னவாகும்?

அதிமுக தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று (நேற்று) முதல் பாஜகவின் கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் இறுதியில், பாஜகவுடன் கூட்டணி இல்லை, கூட்டணி இல்லை, கூட்டணி இல்லை என்று 3 முறைகூறி தனது முடிவை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.

தமிழ்நாட்டில் நிலைகொள்ள வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவுடன் பயணித்துவந்த பாஜகவின் பயணம் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார். பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம்? தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களான அண்ணா, ஜெயலலலிதா குறித்து, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துகள்தான். அதற்காக அவர் வருத்தம்கூட தெரிவிக்காததால் தான் இன்றைக்கு கூட்டணி முறிவு வரை போய் விட்டது.

அண்ணாமலையில் பேச்சு, திமுகவை மட்டுமின்றி அதிமுகவையும் கொந்தளிக்கச் செய்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரும் அண்ணாமலையின் செயலுக்கு கடும் கண்டனங்களை வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு, அண்ணா குறித்து தரக்குறைவாக பேசியவரின் நாக்கு துண்டாக்கப்படும் என்றார். இனி பாஜக கூட்டணியை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்போதே தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அதிமுகவினர் கண்டனங்களைத் தெரிவித்தபோதும், அண்ணா குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என அண்ணாமலை பிடிவாதமாக இருந்தார். இது அதிமுகவினரை மேலும் காயப்படுத்தியது. அண்ணா உருவாக்கிய திராவிடத்தின் பின்னணியில் எழுந்த அதிமுக தொண்டர்கள் அண்ணாமலையின் இந்த பேச்சால் கடும் அதிருப்தி அடைந்தனர்.

அதிமுகவின் திராவிடத் தகுதியை பாஜக குலைத்துவிடும் என்ற அச்சம் அதிமுகவில் அனைத்துத் தரப்பிலும் எழுந்தது. இதுமட்டுமின்றி இதற்கு முன்பு ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துகளும் அதிமுகவுக்கு ஏற்புடையதாக இல்லை.

ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்த அண்ணாமலை, ஜெயலலிதா என்ற பெயரைக் குறிப்பிடாமல், 1991-&96 காலத்தில் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதிமுகவின் தவிர்க்க முடியாத தலைவரான ஜெயலலிதா குறித்து பேசிய கருத்துகளும் இக்கூட்டணி முறிவுக்கு காரணமாகக் கருதப்படுகிறது. அப்போதே அண்ணாமலையைக் கண்டித்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் கூட்டணி வாயிலாக வாக்குகளைப் பெற பாஜகவுக்கு அதிமுக உதவியது. ஆனால் அதிமுகவுக்கு எதிரான அண்ணாமலையின் தொடர் செயல்பாடுகள் இப்போது கூட்டணி முறிவுக்கு வித்திட்டுள்ளன.

இது குறித்து கோவையில் யாத்திரை சென்று வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப சென்றபோது முதலில் கருத்து தெரிவிக்க மறுத்தார். சிறிது நேரம் கழித்து ஊடகங்களுக்கு அவரளித்த பேட்டியில், “தற்போது யாத்திரை சென்று கொண்டு இருக்கிறேன்.

அதிமுகவின் செய்திக் குறிப்பை படித்தேன். அது தொடர்பாக எங்களது தேசிய தலைமை சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கும். ஊடகத்துறையினருக்கு நன்றி. எங்களுக்கு என்று வழிமுறைகள் உள்ளன. எங்கள் தேசிய தலைமை சரியான நேரத்தில் பேசும்.” என்றார்.

தமிழகத்தில் தேர்தல் களத்தில் நுழைய பாஜகவுக்கு அதிமுக உதவியிருந்தாலும், இனி தனித்துவிடப்பட்ட நிலையில் பாஜகவின் கதி என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img