2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஓ.பி.ரவீந்திரநாத். அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தல் வெற்றிக்கு எதிராக மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவில் வருமானம் உள்ளிட்ட விவரங்களை ரவீந்திரநாத் மறைத்துவிட்டார் என்பது மிலானி தொடர்ந்த வழக்கு.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து அண்மையில் அதிரடியாக தீர்ப்பளித்தது. ஓ.பி.ரவீந்திரநாத் தமது வேட்பு மனுவில் வருவாய் தொடர்பான விவரங்களை மறைத்துள்ளார்; ஆகையால் ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என அதிரடியாக தீர்ப்பளித்தது.
இதனால் மக்களவையில் அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி. பதவியும் பறிபோகும் நிலைமை உருவானது. இருப்பினும் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்வதற்கு ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அவகாசம் அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதனடிப்படையில் ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தம்மையும் சேர்க்க கோரி திமுகவின் தங்க தமிழ்ச்செல்வனும் மனுத் தாக்கல் செய்திருந்தார். தங்களது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஓ.பி. ரவீந்திரநாத் தொடர்ந்து விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஓ.பி.ரவீந்திரநாத்தின் எம்பி பதவி இயல்பாகவே ஆகஸ்ட் 4-ம் தேதிக்குப் (நாளை) பின் பறிபோகும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
எம்பி பதவி மட்டுமா பறிபோகப்போகிறது? அதற்கு முன் அவரது மானமே அல்லவா கப்பலேறி விட்டது.
ஆம்; ஓ.பி.ரவீந்திரநாத் மீது டிஜிபியிடம் ஆதாரத்தோடு ஒரு இளம்பெண் பாலியல் புகார் அளித்திருக்கிறார். கொடநாடு கொலை & கொள்ளை வழக்கை துரிதப்படுத்தக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்திய அதே நாளில் அவரது மகன் மீது பாலியல் புகார் வெளியாகி தமிழ்நாட்டில் புயலை கிளப்பி இருக்கிறது.
ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு ஏற்பட்ட தலைவலியை இது திருகுவலியாக மாற்றி விட்டது. பொதுவாழ்வில் இருப்பவர்கள் தனிமனித ஒழுக்கம் தவறினால் என்ன நடக்கும் என்பதற்கு இதுவே அத்தாட்சி.
எப்படித் தான் மீளப் போகிறாரோ?