கடந்த சில மாதங்களாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கு காரணமே அண்ணாமலை தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என பொருள்படும்படியாக ஒரு கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதாவை பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என அதிமுகவினர்ஆவேசப்பட்டனர். இதனால் அதிமுக- பாஜக இடையே கூட்டணி நீடிக்குமா என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில்தான் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமருக்கு பக்கத்தில் அமரும்படியான வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அதிமுக &- பாஜக இடையே இருந்த பகைமை சிறிது அணைந்திருந்தது.
அதோடு விட்டாரா அண்ணாமலை? அண்ணாதுரையை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், 1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்வில் பார்வதி தேவியை விமர்சித்த அண்ணாதுரை, முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டு வந்தார் என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அண்ணா குறித்து தவறாக உண்மைக்கு புறம்பாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, அண்ணா குறித்து நான் கூறிய கருத்துகள் உண்மை. அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்
என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பாஜகவுடனான கூட்டணி முறிந்து விட்டதாக ஜெயக்குமார் அறிவித்தார்.
அவர் கூறுகையில் ஜெயலலிதா, அண்ணா உள்ளிட்டோரை அண்ணாமலை தொடர்ந்து தவறாக பேசி வருகிறார். அதிமுக- பாஜக இடையே கூட்டணி இப்போது இல்லை என தெரிவித்திருந்தார். இது கட்சியின் முடிவு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒருசில மணி நேரங்களே இந்த கொள்கை முடிவு நீடித்தது. ஆம், அதிமுக திடீர் பல்டி அடித்தது. அதிமுக-& பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என செல்லூர் ராஜூ திடீரென அறிவித்தார். இந்த நிலையில் அண்ணாமலையும் அதே கருத்தையே தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை மேலும் கூறுகையில் அண்ணா குறித்து நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என கூறவும் மாட்டேன் என்றும் அண்ணாமலை கூறுகிறார்.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்று தான் பாஜக. ஆனால் அதிமுகவையே அடக்கி ஒடுக்க எத்தனிக்கிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காத ஒரு கட்சியை அதிமுக தனது கூட்டணியில் வைத்துக் கொள்வது என்பதை விட கேவலமானது வேறு என்ன இருக்க முடியும்?
அதிமுக திடீர் பல்டிக்கு என்ன காரணம்? அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். அண்ணாமலையின் வாயை அதிமுகவால் மூட முடியவிலை. மூடவும் முடியாது.
அதிமுக – பாஜக கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் கேலிக்கூத்தாகவே பார்க்கிறார்கள். இக்கட்சிகளின் கூட்டணி தர்மத்தை எடப்பாடி பழனிசாமி தான் விளக்க வேண்டும்.
வாய் திறப்பாரா? திறக்க முடியுமா?