Homeதலையங்கம்அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பதிலடி கொடுத்த நடராஜன்!

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பதிலடி கொடுத்த நடராஜன்!

தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் நடராஜன் டிஎன்பிஎல் தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. 2020ல் ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.

பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

எனினும் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையில் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு இடம் மறுக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நடராஜன் பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது. சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக உருவெடுத்தது. பந்து வீச்சு வீரர்களாக இடம்பெற்ற அர்ஷ்தீப் சிங் அல்லது முகமது சிராஜூக்குப் பதிலாக நடராஜனைத் தேர்வு செய்திருக்கலாம் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம்மறுக்கப்பட்டதை குறிப்பிட்டு பலரும் தேர்வுக்குழுவை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி நடராஜன் சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது அதிரடி பந்து வீச்சால் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக 15 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கான பர்பில் நிற தொப்பியை தன்வசப்படுத்தினார்.

இதனைக் குறிப்பிட்டு தன்னை டி20 உலகக்கோப்பை போட்டிக்குத் தேர்ந்தெடுக்காத தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடராஜன் செயல்பட்டுள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விளையாட்டில் சறுக்கல் ஏற்படுவதும் வெற்றி & தோல்வி மாறிமாறி வருவதும் சகஜம் தான். வீறு கொண்ட வேங்கையாக களமிறங்கி கலக்கி வரும் நடராஜனின் சாதனைகள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை!

படிக்க வேண்டும்

spot_img