அதிமுகவில் ஜூன் – 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்றும், தற்காலிக அவைத்தலைவரால் பொதுக்குழுவை கூட்ட முடியாது எனவும் புதன்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இது ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த வெற்றி என்றும், ஈபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு என்றும் கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு மூலம் இபிஎஸ் -& ஓபிஎஸ் இரு தரப்புகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தீர்ப்புக்குப் பிறகு, ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை யாராலும் பிளவுபடுத்த முடியாது என்றும், கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக இந்த தீர்ப்பை வழங்குகிறோம் எனவும் தெரிவித்தார். அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இருதரப்பு மோதலில் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இது ஒரு நாளில் முடியும் பிரச்சினை அல்ல. தினமும் அதிமுகவின் விவகாரம் நீதிமன்றத்தில் இருந்தால், கட்சியின் நிலை என்ன ஆகும்? தொண்டன் எங்கு இருக்கப் போகிறான்? என்பது பற்றி எல்லாம் இரு தரப்புத் தலைவர்களுக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை. இந்த ஒரு தீர்ப்பால், எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவுதான். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரு கட்சி, ஓர் அரசை எதிர்த்து போராட வேண்டும், பொதுப்பிரச்சினை தொடர்பாக ஒரு முடிவு எடுக்க வேண்டுமானால், இவர்கள் எப்படி முடிவு எடுப்பார்கள்?
தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காகவும், பதவி ஆசைக்காகவும் கட்சி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டில் வலுவான எதிர்க்கட்சி அதிமுக. ஆனால், அந்த அந்துஸ்துக்கு இவர்களே தடையாக இருக்கிறார்கள். திமுகவை பாஜக தலைவர்கள் தான் எதிர்க்கட்சி போல கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதிமுக செய்ய வேண்டிய வேலையை பாஜக செய்து வருகிறது.
இந்த விவகாரம், இப்படியே நீடித்தது எனில், 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கட்சி தொடர்பாக அனைத்து முடிவுகளையும் பாஜக எடுக்கும் நிலை உருவாகிவிடும். ஒருவர் பாஜகவின் முழு ஆதரவுடன் இருக்கிறார், மற்றொருவர் பாஜகவின் அரைகுறை ஆதரவுடன் இருக்கிறார். இந்த நிலையில் அதிமுகவின் எதிர்காலம் எங்கு இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிமுக கட்சிக்குள் சமரசமாக செல்லும் வாய்ப்பு உள்ளதா? என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்டபிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என தனது கேவியட் மனுவில் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.இரண்டு தலைமைக்கும் இடையே நடக்கும் மோதல் நீடிக்கும்பட்சத்தில் அதிமுகவின் கதி என்னாகும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்!



