இந்தியாவிலுள்ள மாநிலங்களில் அதிகமாக அரிசியை உணவாக உண்ணும் மாநிலம் தமிழகம்தான். விலையில்லா அரிசி வழங்கி பெருமை சேர்த்ததும் தமிழகம்தான்.ஒன்றிய அரசு இதுவரை டிரேட் மார்க் என்று சொல்லக்கூடிய இண்டியா கேட் உள்ளிட்ட உயர் ரக அரிசி ரகங்களுக்கு மட்டுமே வரி விதித்தது.
ஜிஎஸ்டியின் 47வது கவுன்சில் கூட்டத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதில் மொத்த எடை 25 கிலோவுக்கு மேலுள்ள அரிசி சிப்பத்திற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.
25 கிலோ அரிசிக்கு குறைவாக விற்பனை செய்தால் வரி என அறிவித்திருக்கின்றனர்.கடந்த காலங்களில் சிறு விவசாயிகள் குறைந்த அளவே நெல்லை உற்பத்தி செய்து 10 மூட்டை, 20 மூட்டை என 100 மூட்டை வரை அரிசி ஆலைக்கு கொண்டு வந்து அதனை அரிசியாக்கி எளிதில் விற்பனை செய்து விடுவதுண்டு. ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிறு விவசாயிகள் அரிசி ஆலைக்கு நெல் மூட்டைகளைக் கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி என்பது இல்லாமல் இருந்த நிலையில் ஒன்றிய அரசின் இந்த 5 சதவிகித ஜிஎஸ்டி வரிவிதிப்பால் 1 கிலோ, 5 கிலோ, 10 கிலோ என சில்லறை விற்பனையில் அரிசியை ஏழை, எளிய மக்கள் வாங்க முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்துமே பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் நிலை தற்போது உள்ளது. அதே போல் அரிசியும் மூட்டைகளில் அடைத்தே பெரும்பாலான வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
25 கிலோ வரை சில்லறையில் அரிசி வாங்கும் போது அதற்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் 25 கிலோவுக்கு மேல் ஜிஎஸ்டி வரி கிடையாது என்பதால் கூடுதலாக ஒரு கிலோ அரிசியை வைத்து 26 கிலோவாக மூட்டை கட்டி விற்கும் பணியில் ரைஸ் மில் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான மக்கள் சன்னமான அரிசி வகைகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் தமிழகத்திற்கு தேவையான நெல் வகைகளை ஆந்திரா மற்றும், கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டன் வரை நெல்லை கொள்முதல் செய்து அரிசி ஆலைகளில் அரிசியாக்கி விற்பனை செய்கின்றனர். அந்தப் பிழைப்பில் தான் தற்போது மண் விழுந்திருக்கிறது.
எனவே மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான நெல்லுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்பதே அரிசி வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள், ஏழை&எளிய மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாக உருவெடுத்துள்ளது.
இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, மதுரையில் ஆகஸ்டு 28ல் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசி மீதான வரியை ரத்து செய்யும் அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் சாதனையாக சொல்லப்பட்டு வருகிறது. ஏழைகளின் வயிற்றில் அடிக்காமல் இந்த சாதனை தொடரட்டும். அது தான் உண்மையான சாதனையாக இருக்கும்.ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரிசி மீதான 5 சதவீத வரியை அடியோடு ரத்து செய்ய வேண்டும். செய்வாரா?



