பேரறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கும் 700 கைதிகளை அரசு விடுதலை செய்ய உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் முன்விடுதலையை பெறுவதற்குத் தகுதியானவர்கள் தொடர்பான அரசாணையும் வெளியானது.
அதில், வகுப்பு மோதல், சாதி மோதல், பாலியல் வன்கொடுமை, அரசுக்கு எதிரான செயல்பாடுகள், குண்டுவெடிப்பு, ஊழல் உள்பட 17 வகையான குற்றங்களில் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது, ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் மனநல மருத்துவர், மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத்துறையின் தலைமை நன்னடத்தை அலுவலர், குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் உள்ள மூத்த வழக்கறிஞர், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவியில் உள்ள ஒருவர் என ஆறு பேர் இடம்பெற உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த குழுவால் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள், கோவை குண்டுவெடிப்பு கைதிகள் போன்ற, நீண்டகாலமாகச் சிறையில் உள்ளவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்படுமா? இந்த குழுவால் என்ன நடக்கும்? என்ற கேள்வி, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.
இந்தக் குழுவினர் தமிழ்நாடு சிறைகளில் 10 மற்றும் 20 ஆண்டுகளில் தண்டனை முடிந்தும் விடுதலை ஆகாமல் உள்ளவர்களில் வயது முதிர்ந்தவர்கள், பல்வேறு இணை நோய்கள் உள்ளவர்கள், உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது நிலைமையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு முன்விடுதலைக்கு பரிந்துரை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மனிதனை மேம்படுத்தும் இடமாக சிறை உள்ளது என மகாத்மா காந்தி சொல்வார். ஒருவர் சிறைக்குச் செல்கிறார் என்றால் அவர் திருந்தி நல்லபடியாக வரவேண்டும் என்பதே மக்களின் மனநிலையாக இருக்க வேண்டும்.
குழுவின் நோக்கம் நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
அரசாணையில் 17 வகையான குற்றங்களைக் குறிப்பிட்டுள்ளதால், அது தொடர்புடைய வழக்குகளில் கைதானவர்களை முன்விடுதலை செய்வதில் சிக்கல்கள் இருக்கலாம். இதனைக் களையும் வகையில் அரசு அமைத்துள்ள குழு செயல்படுமா?
இக்குழுவை, மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இப்படியொரு குழுவை வேறு எந்த மாநில அரசும் அமைத்ததில்லை.
இந்தக்குழுவின் பரிந்துரைகள் சிறைத்துறை வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக இருக்கும்.
அரசின் முடிவை வரவேற்போம்!



