fbpx
Homeதலையங்கம்அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின்?

அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின்?

நடிகர் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணிச் செயலாளராக கட்சிப் பணியாற்றி வருகிறார். சேப்பாக்கம் – திருவள்ளிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அவர், தன் தொகுதி மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

குறைகளைத் தீர்த்து வைப்பதில் தானே களமிறங்கி செயலாற்றும் அவரது சேவை தொகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்கிறார். அவர் மீது குறை சொல்ல தேடித் தேடி பார்த்தாலும் ஒன்றும் கிடைக்காது.

இந்த நிலையில் தான், ‘தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி இடம்பெற வேண்டும், அவருக்கு அந்த தகுதி இருக்கிறது. 234 தொகுதிகளையும் சொந்தம் கொண்டாடும் வகையில் உதயநிதி உயர் பொறுப்புக்கு வரவேண்டும்‘ என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். பூனைக்கு மணி கட்டி இருக்கிறார்.

அந்த மணி ஓசை மாநிலம் முழுவதும் திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த சத்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காதுகளிலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

அமைச்சரின் கருத்துக்குஎதிர்ப்புக் குரல் எழ வாய்ப்பே இல்லை. உள்ளேயும் எதிர்ப்பு இல்லை; வெளியிலும் இல்லை.

அமைச்சராக வலம் வந்து மக்கள் பணியில் அசர வைக்கும் திறமை உதயநிதிக்கு உண்டு. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே அவர், தனக்கென ஒரு பாணியில் பிரச்சாரத்தை முன்னெடுத்து அரசியல் நட்சத்திர அந்தஸ்தை பெற்று விட்டார். இதற்கு மேல் என்ன வேண்டியிருக்கிறது?

வயதை பார்த்தோ, ஆளைப் பார்த்தோ யாருடைய திறமையையும எடைபோட்டு விட முடியாது. சட்டமன்ற உறுப்பினராக அசத்தும் உதயநிதியால் அமைச்சராக ஜொலிக்க முடியாதா, என்ன?.

அவர் அமைச்சர் ஆவதில் எந்த தவறுமில்லை. ஆனால் அதுகுறித்து தலைமைக் கழகம் தான் முடிவெடுக்க முடியும்.

திமுகவின் மேல்மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவருமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், உதயநிதி அமைச்சராகும் தினத்தை!

அந்த நாள் விரைவில் மலரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img