Homeபிற செய்திகள்இந்திய அறிவு மரபின் சமூக நலனுக்கான இரு குரல்கள்: வள்ளுவம், கௌடில்யம்

இந்திய அறிவு மரபின் சமூக நலனுக்கான இரு குரல்கள்: வள்ளுவம், கௌடில்யம்

மனித சமுதாயம் செம்மையாக இயங்குவதற்கு அறமும் அரசியலும் இரு கண்கள் போன்றவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நலனையும், நாட்டின் வளர்ச்சியையும் முதன்மைப்படுத்தி உருவான இருபெரும் சிந்தனைகள் & தமிழின் கொடையான திருவள்ளுவரின் திருக்குறள் மற்றும் வடமொழியின் கொடையான சாணக்கியரின் (கௌடில்யர்) அர்த்தசாஸ்திரம். இவை இரண்டும் தோன்றி நூற்றாண்டுகள் கடந்தாலும், இன்றைய நவீன அரசுகளுக்கும் சமூக நலனுக்கான வழிகாட்டியாகத் திகழ்கின்றன.
அறம் சார்ந்த சமூக நலன்:வள்ளுவம்
திருவள்ளுவர் சமூக நலனை ‘அறத்தின்’ வழியிலேயே அணுகுகிறார். ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது தனி மனிதனின் ஒழுக்கத்திலும், சமூக நீதியிலும் தான் அடங்கியுள்ளது என்பது வள்ளுவரின் கருத்து. அறம், அன்பு, ஒழுக்கம், கல்வி, விருந்தோம்பல், ஈகை, நட்பு, நீதி, ஆட்சி, பொருளாதாரம் போன்ற பல கூறுகள் சமூக வாழ்வின் அடிப்படைகளாக வள்ளுவரால் முன்வைக்கப்படுகின்றன.
திருக்குறளின் சமூகச் சிந்தனையின் அடிப்படை அறமாகும். தனிமனிதன் அறத்துடன் வாழும்போது மட்டுமே நல்ல சமூகம் உருவாகும் என்பது வள்ளுவரின் கருத்தாகும்.
“அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு” -குறள்- 32
என்ற குறளின் வழியாக அறத்தின் உயர்வு எடுத்துரைக்கப்படுகிறது.

சமூகத்தில் ஒழுக்கம் நிலைத்திருக்க தனி மனிதனின் பண்பு முக்கியமானதாகிறது. மேலும் பசியின்மை, நோயின்மை, வெளிப்பகையின்மை ஆகிய மூன்றும் நிறைந்தது தான் சிறந்த நாடு என்கிறார் வள்ளுவர்.
“உறுபசியும் ஓவாப்பிணியும் செறு பகையும்
சேராது இயல்வது நாடு.”- குறள் 734
குறள் கூறும் அரசியல் என்பது அதிகாரத்தைக் குவிப்பதற்கானது அல்ல. மாறாக, குடிமக்களின் நலனைக் காக்கும் ‘செங்கோன்மை’ சார்ந்ததாகும். பொருளென்னும் பொய்யா விளக்கம் அரசைச் செம்மையாக நடத்தத் தேவை என்பதனை உணர்ந்து செயல்பட்டது வள்ளுவ வழி அரசு.

“உறுபொருளும் உல்கு பொருளும் தன்ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்”-குறள் -756
“வாரி பெருக்கி வளம்படுத்து” என பொருள் வரும் வகையினை ஆராய்ந்து அறிந்து பொருளை ஈட்டவேண்டும். அறவழியிலே பொருளை ஈட்ட வேண்டும். அவ்வாறாக வந்தபொருளை,
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லதரசு”. – குறள் 385
பொருள் ஈட்ட வழிவகை செய்தலும், வணிகம் செய்வார்க்கு வணிகம் பேணி அளித்து சீரிய முறையில் வருவாயைப் பெருக்குதலும், பெற்ற பொருளைப் பேணிக்காத்தலும், வறியார்க்கும் இயலாதவர்க்கும், படைமாட்சிக்கும், அறவழியே இன்பக் கனவை உருவாக்குதலும் அரசின் பொறுப்புகளாகும் என்பதை வலியுறுத்துகிறார்.

மக்களை ஆள்பவர் என்பதைக் காட்டிலும், மக்களை நீதியுடனும் அன்புடனும் காப்பவரே சிறந்த ஆட்சியாளர்” என்ற உயர்ந்த அரசியல் அறத்தையே வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்துகிறார்.
நிர்வாகம் மற்றும் பொருளாதார நலம்: கௌடில்யம் கௌடில்யர் என அழைக்கப்படும் சாணக்கியர், சமூக நலனை நடைமுறை நிர்வாகம் (Governance) மற்றும் பொருளாதார வலுவோடு (Economy) பிணைத்து நோக்குகிறார். நாட்டின் பாதுகாப்பு, வரி நிர்வாகம், சட்டஒழுங்கு ஆகியவை சரியாக இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பது அர்த்த சாஸ்திரத்தின் மையக்கருத்து. அர்த்தசாஸ்திரத்தில் அரசனின் தனிப்பட்ட இன்பத்தை விட மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசனின் நலன் மக்களின் நலனுடன் இணைந்ததாகக் கருதப்படுகிறது.

ப்ரஜாஸுகேஸுகம்ராக்ஞ: ப்ரஜாநாம்சஹிதேஹிதம் |
நாத்மப்ரியம்ஹிதம்ராக்ஞ: ப்ரஜாநாம்துப்ரியம்ஹிதம் ||
அர்த்தசாஸ்திரம்&பாகம்- 1அத்தியாயம்-19, பக்.90
மக்கள் சுகத்திலேயே மன்னன் சுகம் உள்ளது. மக்களுடைய நலனிலேயே மன்னனுடைய நலன் உள்ளது. மன்னன் தனக்கு விருப்பமானதைப் பற்றி எண்ணாமல், மக்களுக்கு விருப்பமானது எதுவோ, அதையே தனக்கு விருப்பமானதாகக் கொள்ள வேண்டும். மேலும் கௌடில்யரின் அரசியல் சிந்தனையில், ஆட்சியாளர் மக்களின் பாதுகாப்பையும் பொருளாதார வளத்தையும் உறுதிசெய்ய வேண்டியவர்.
இதனால் அரசன் தனிப்பட்ட அதிகாரத்தை அனுபவிப்பவராக மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பு கொண்ட நிர்வாகியாகவும் விளங்குகிறார்.
அரசின் முதன்மைப் பணிகளில் ஒன்று மக்களைப் பாதுகாப்பதாகும். வெளிப்புற எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதோடு, உள்நாட்டு குற்றங்கள், ஊழல், பொருளாதார முறைகேடுகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும் என அர்த்தசாஸ்திரம் வலியுறுத்துகிறது. அர்த்தசாஸ்திரத்தில்பொருளாதாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, வணிகம், தொழில், வரிவிதிப்பு, அரசின் வருவாய் போன்றவை விரிவாக விவாதிக்கப்படுகின்றன.

அரசின் செயல்பாடுகளுக்குத் தேவையான வருவாயை உருவாக்குவதில் வரி விதிப்பு முக்கியமானதாகும். ஆனால் வரிவிதிப்பு முறையானதாகவும் நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்து அர்த்தசாஸ்திரத்தில் காணப்படுகிறது. சமூகத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சட்டமும் நீதியும் அவசியம். குற்றங்கள், தண்டனைகள், சொத்துரிமைகள், வணிகத்தகராறுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அர்த்தசாஸ் திரத்தில் இடம்பெறுகின்றன.

திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் வெவ்வேறு நோக்கு நிலைகளைக் கொண்டிருந்தாலும், சமூக ஒழுங்கு, மக்கள்நலன், நீதி, நல்லாட்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன.
திருக்குறள் அறம் மற்றும் மனிதநேயத்தின் வழியாகச் சிறந்த சமூகத்தை உருவாக்க வலியுறுத்துகிறது. அர்த்தசாஸ்திரம் அரசியல் நிர்வாகம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் வழியாக சமூகப்பாதுகாப்பை முன்னிறுத்துகிறது.
எனவே, இவ்விரு நூல்களும் இணைந்து அறம் சார்ந்த தனிமனித வாழ்வும், திறமையான ஆட்சி சார்ந்த சமூக வாழ்வும் இந்திய அறிவு மரபில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன.

கட்டுரையாளர்கள்:
முனைவர் கோ.சுகன்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், –
முனைவர் ந.பிரதீபா, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, சுயநிதிப்பிரிவு, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை.

படிக்க வேண்டும்

spot_img