தமிழக சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் நிலையில், 110 விதிகள் என்றால் என்ன? என்பது பற்றி பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு சரியான புரிதல் இருப்பதில்லை.
பொதுவாக மக்களுக்காக கொண்டுவரப்படும் எந்த ஒரு திட்டமானாலும் சரி, அதை அமல்படுத்துவதற்கு முன்பு சட்டமன்றத்தில் விரிவாக அத்திட்டத்தை பற்றி விவாதிக்கப்படும். அந்த விவாதத்தின் சாதக – பாதகங்களை அறிந்தே திட்டங்களும் அறிவிக்கப்படும். அதன்பிறகு செயல்படுத்தப்படும். இதுதான் நடைமுறை.
ஆனால் மாநில அரசால் முன்மொழியப்படும் ஒரு முக்கியமான திட்டம் அல்லது பிரச்சனை குறித்து உடனே முடிவெடுக்க வேண்டும் என்றால், விவாதங்களுக்கு அவ்வளவாக நேரம் இருக்காது. சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் இது பற்றி விவாதித்து முடிப்பதற்குள் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது, அல்லது நேரம் வீணாகும். விவாதமே செய்தாலும் சில சமயம், திட்டம் குறித்த நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடவும் வாய்ப்பு உள்ளதாக அரசு கருதினால், 110 விதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் பற்றி, அவை உறுப்பினர்கள், அல்லது எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது. முழுக்க முழுக்க மாநில அரசே அறிவித்து, அதுவே செயல்படுத்திவிடும்.. அப்படித்தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011 முதல் 2016 வரையில் இந்த விதியின் கீழ் நிறைய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதாவது, அவரது ஆட்சி காலத்தில் 181 அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிட்டார். அவரை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஜெயலலிதாவின் வழியையே கையில் எடுத்தார். 110 விதியின் கீழ் 453 அறிவிப்புகளை வெளியிட்டார். 110-ன் விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவை எல்லாம் செய்து முடிக்கப்பட்டனவா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில், பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசினார். அப்போது சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவில் பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். 10 ஆண்டுகளில் 110 விதியின் கீழ் ஒரு அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவது இதுவே முதன்முறையாகும்.
அதுமட்டுமல்ல, அதிமுகவின் கடந்த கால அமைச்சரவையில் முதல்வர் மட்டுமே (ஜெயலலிதா, எடப்பாடி) 110 விதியின் கீழ் வெளியிட்டு வந்த அறிவிப்புகளை மீண்டும் பழைய ஜனநாயக முறைப்படியே துறைசார்ந்த அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அந்தந்த அமைச்சரே அறிவித்துக்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதித்துள்ளது, பல்வேறு தரப்பினரையும் ஈர்த்து வருகிறது.
சட்டப்பேரவையின் மரபுகள் திமுக ஆட்சியில் பாதுகாக்கப்படுகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம் ஆகும். இது தொடர வேண்டும்.
ஜனநாயகம் தழைக்கட்டும்!



