fbpx
Homeதலையங்கம்மோடி, ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்தால் என்ன நடக்கும்?

மோடி, ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்தால் என்ன நடக்கும்?

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்த நாள் முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் இபிஎஸ் பக்கம்தான் இருந்து வருகின்றனர்.

அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலோரின் ஆதரவும் தங்களுக்குதான் இருப்பதாக இபிஎஸ் தரப்பு பயங்காட்டி வந்ததால், பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்று ஓபிஎஸ் நடத்திய சட்டப்போராட்டம் ஆரம்பத்தில் அவருக்கு பலனளித்ததாக தெரிந்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் ஓபிஎஸ்ஸை கைவிட்டது.

கட்சி நிர்வாகம் கொஞ்சம், கொஞ்சமாக இபிஎஸ் வசம் போய் கொண்டிருக்க, கட்சி தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் இனி என்ன செய்யப் போகின்றன என்று ஓபிஎஸ்ஸும், அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.

இப்படி அரசியலில் இனி தமக்கு வாழ்வா, சாவா என்ற நிலையில் ஓபிஎஸ் இருந்துவரும் நிலையில், ஓபிஎஸ் விஷயத்தில் தமது நிலைப்பாடு என்ன என்பதை கூட்டணி கட்சி என்ற முறையில் பாஜகவிடம் தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக இபிஎஸ் கருதினார்.

ஆனால், அவர் திட்டமிட்டப்படி மோடி, அமித் ஷா ஆகிய இருவரையும் சந்திக்க முடியாததால் தமது நான்கு நாட்கள் டெல்லி பயணத்தை இரண்டு நாட்களிலேயே முடித்து கொண்டு ஏமாற்றத்துடன் சென்னை திரும்பி உள்ளார்.

இத்தகைய பரபரப்பான சூழலில்தான், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 28) சென்னை வர உள்ளார்.

அன்றைய தினம் இரவு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கவுள்ள அவரை இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சந்திப்பின்போது அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தங்களது தரப்பு நியாயங்களை இபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பினரும் மோடியிடம் விரிவாக எடுத்துரைப்பார்கள் என தெரிகிறது.

எனவே இந்த விஷயத்தில் மோடியின் நிலைப்பாடு, முடிவு என்ன என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடி, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்ய முயல்வாரா?, அதுபோன்றதொரு சமாதானத்தை இபிஎஸ் ஏற்றுக்கொள்வாரா? என்பதெல்லாம் மோடியின் சென்னை வருகைக்கு பின் தெரிந்துவிடும்.

முடிவை அறிய நாமும் காத்திருப்போம்!

படிக்க வேண்டும்

spot_img