தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள், கூட்டுறவுத்துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு பொதுமக்களுக்கு அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நியாயமான விலையில் விற்பனை செய்யும் பொருட்டு, ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டம், வடகோவை, சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில், கூட்டுறவுத்துறையின் சார்பில், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் 05.11.2026 அன்று துவக்கி வைத்தார்.

அதன்படி கோவை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் (05.11.12026 (வியாழக்கிழமை) முதல் 07.11.2026 (சனிக்கிழமை) வரை மூன்று நாட்களுக்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100/- என்ற சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த தொகுப்பில் 500 கிராம் பெரிய வெங்காயம், 500 கிராம் தக்காளி, 250 கிராம் கத்தரிக்காய், 250 கிராம் உருளைக்கிழங்கு, 200 கிராம் கேரட், 200 கிராம் பீன்ஸ், 100 கிராம் பச்சை மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் 400 முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு தேங்காய் ஆகிய 10 வகையான காய்கறிகள் மொத்த எடை 2.55 முதல் 2.60 கிலோ வரை எடையுள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.100- ஆகும்.
கோவை மாவட்டத்தில், இச்சிறப்பு மளிகைத் தொகுப்பானது, ரங்கே கவுடர் தெரு ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகா நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, அன்னூர் கூட்டுறவு பண்டகசாலை, ஆர்.எஸ்.புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, பெரியநாயக்கன்பாளையம் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை, வடுகபாளையம் பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை, பல்லடம் பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை, கவுண்டம்பாளையம் தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை, துடியலூர் தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை, பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு, மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள கோயம்புத்தூர் தபால் மற்றும் தந்தி பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை, சிந்தாமணி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, சூலூர் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, இருகூர் ஜின்னிங் பேக்டரி சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு பண்டகசாலை ஆகிய விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டது.
இத்திட்டத்தில் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் எடையிடப்பட்டு தொகுப்பாக வழங்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களுக்கு புதிய மற்றும் தரமான காய்கறிகள் வெளிச்சந்தை விலையைவிடக் குறைவான விலையில் கிடைக்கும். அனைத்துப் பொதுமக்களும் பயன்பெறும் வகையில், விற்பனை நிலையங்களின் வழக்கமான வேலை நேரங்களில் இத்தொகுப்புகள் விற்பனை செய்யப்படும். அதிகமான பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த சர்மிளா தெரிவிக்கையில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100 என்ற சிறப்பு விலையில் அருகிலுள்ள கூட்டுறவு அங்காடியில் கிடைக்கும் வகையில் செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

பூமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த உஷா என்பவர் தெரிவிக்கையில், பண்டிகை காலங்களில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடிக்கடி வாங்க வேண்டியதாக உள்ள நிலையில், 10 வகையான காய்கறிகள் ரூ.100 குறைந்த விலையில் வழங்கி, ஏழை, எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
கோவை மாவட்டம்.



