fbpx
Homeதலையங்கம்போலி பல்கலைக்கழகங்கள்: முற்றுப்புள்ளி வையுங்கள்!

போலி பல்கலைக்கழகங்கள்: முற்றுப்புள்ளி வையுங்கள்!

நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கண் காணித்து வருகிறது. ஆண்டுதோறும் போலி பல்கலைக்கழகங்களின் விவரங்களை யுஜிசி வெளியிடுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான யுசிஜி அறிவிப்புப்படி, இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை எவை என்ற விபரங்களை யுஜிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளது.

அதன்படி டெல்லியில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் 8 போலியானவை என்று தெரியவந்துள்ளது. மேலும் உத்தரப் பிரதேசத்தில் 4, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தலா இரண்டு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒன்று என போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் தமிழ்நாட்டில் போலி பல்கலைக்கழகங்கள் ஏதும் இல்லை என்பது ஆறுதல் தருகிறது. உலகம் முழுவதும் போலி என்பது மலிவானதாக உள்ளது. உணவு பொருள், மின்னணு சாதனங்கள் என தொடங்கிய போலி, தற்போது கல்வி வரை நீண்டுள்ளது. இதன் தொடர்ச்சி போலி பட்டங்கள்.

இந்தியாவின் மிக உயரிய படிப்பாக கருதப்படும் டாக்டர் படிப்புக்கு அடுத்தபடியாக, முனைவர் பட்டம் பெற்றவர்கள் மெத்த படித்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் சமீப காலங்களாக இந்த முனைவர் பட்டங்களே போலியாக வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

இவ்வாறு பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்து யுஜிசி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்தான் 21 போலி பல்கலைக்கழகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்த பல்கலைக்கழகங்களுக்கு டிகிரி வழங்க எந்த அதிகாரமும் இல்லை.
போலி பல்கலைக்கழகங்களில் சேர்ந்து ஏமாந்து போகாதீர்கள் என்று மாணவர்களை யுஜிசி எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரவேற்கத்தக்கதே. அதே நேரத்தில் இன்னொரு கேள்வியும் எழாமல் இல்லை.

போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதை முழுமையாகத் தடுக்கும் வேலையில் ஏன் யுஜிசி இறங்கவில்லை?. ஒன்றிய, மாநில அரசு உதவியுடன் தடுக்க செய்ய முடியாதா?

இதே போலி பல்கலைக்கழகங்கள் எம்பிபிஎஸ், எம்எஸ், எம்டி போன்ற மருத்துவப்பட்டங்களை வழங்கினால் போலி என எச்சரித்து விட்டு சும்மா இருக்க முடியுமா? ஆண்டுதோறும் போலி பல்கலைக்கழகங்களை அடையாளம் கண்டு அறிவிக்க முடியும் என்றால் அவற்றை முடக்க ஏன் முடியாது?

எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ஆன்லைன் மோசடிகளில் சிக்கிப் பணத்தை இன்னமும் பொதுமக்கள் இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதேபோலத்தான் போலி பல்கலைக்கழகங்களை தெரியப்படுத்தி அதில் சேர வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அவற்றில் சேர்ந்து மாணவர்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

எனவே, நாட்டில் எந்தவொரு போலி பல்கலைக்கழகமும் செயல்பட முடியாத அளவு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.

இது முடியாத காரியம் அல்ல என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடும் நடவடிக்கை எடுக்கக் களமிறங்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img