fbpx
Homeதலையங்கம்பால் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்துமா?

பால் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்துமா?

தனியார் நிறுவனங்கள் நேற்று முதல் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. மீதம் உள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. ஆவின் நிறுவனம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கிறது. தனியார் நிறுவனங்கள் 1.25 கோடி லிட்டர் பால்பாக்கெட்டுகளை விற்பனை செய்கின்றன.

தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆவின் வெறும் 16 சதவீதம் மட்டுமே, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 84 சதவீதமாக உள்ளது.
தனியார் நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான விலை உயர்வு அறிவிப்பை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பால் முகவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது சாத்தியப்படுமா?

தமிழகத்தில் மூன்று வகையான ஆவின் பால்கள் லிட்டர் முறையே ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இதே வகையான பாலை தனியார் நிறுவனங்கள் ரூ.54&-56, ரூ.64&-66, ரூ. 70&-72 வரை விற்கின்றன.
இதனால், பால் சார்ந்த உணவு பொருட்கள் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 14 மாதங்களில் தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசு, தனியார் பேருந்துகளில் கட்டணம் ஒரேமாதிரியாகத் தானே இருக்கிறது. அதேபோல பால் விலையும் இருக்கும்படியாக அரசு நடவடிக்கை பாய வேண்டும்.

பால் சந்தையில் ஆவினின் பங்கை 50% ஆக உயர்த்துவது; பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாகத் தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். ஆவின் பால் பயன்பாட்டுக்கு பொதுமக்களும் மாறி அரசுக்கு ஆதரவு தருவதன் மூலம் தனியார் பால் விலையை மக்களாலும் கட்டுப்படுத்த இயலும்.என்ன நடவடிக்கை எடுத்தாவது தமிழக அரசு, தனியார் பால் விலை உயர்விலிருந்து மக்களைக் காக்க வேண்டும். வருங்காலத்திலாவது தனியார் பால் விலை உயர்த்துவதை முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img