ஒன்றிய பட்ஜெட்டில் 5 நதிகள் இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோதாவரி – பெண்ணாறு – காவிரி நதிகள் இணைப்புத் திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது.
மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்று இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் வீணாகக் கடலில் கலக்கும் 750 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும் என்பதால் இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் பங்களிப்போடு ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் தயாராகி உள்ளது. மாநிலங்கள் தலா ரூ.5 ஆயிரம் கோடி தரவேண்டும் என்பதும் மீதியை ஒன்றிய அரசு வழங்கும் என்பதும் இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 250 டிஎம்சி தண்ணீர் கிட்டும் என்பதும் இத்திட்டத்தின் சாராம்சம்.
கேட்பதற்கு சர்க்கரையாக இனித்தாலும் கசப்பான சிக்கல்களும் இருக்கின்றன. இத்திட் டத்தை நிறைவேற்ற முடியுமா, அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்றால் நம் கண்முன் ஒரு பெரியக் கேள்விக்குறி தான் வந்து நிற்கிறது.
நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து வாஜ்பாய் காலத்தில் இருந்து ஒன்றிய பட்ஜெட்களில் அறிவிப்பு கள் வெளியாகி வந்திருக்கிறது. ஆனால் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இருந்து வந்துள்ளது. தற்போதைய பட்ஜெட்டில் திட்ட இறுதி அறிக்கை தயாராகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் ஒத்தகருத்தை பெறாமலேயே கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை அறிவித்து இருப்பது சரிதானா? ஏற்கனவே நதிநீர்ப் பங்கீட்டில் மாநிலங்கள் முட்டி மோதிக் கொள்கின்றன.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இந்த திட்டத்தை அறிவித்து இருப்பது சரிதானா? நதிகளை தேசியமயமாக்காமல் நிறைவேற்ற முடியும் என ஒன்றிய அரசு கருதுகிறதா? இதற்கான அடிப்படை செயல் விளக்கங்கள் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
ஆனாலும் திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. முந்தைய ஆட்சி காலங்களில் இருந்தது போல கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.
அது தான் அனைவரது விருப்பமும் பிரார்த்தனையும் ஆகும். இந்த மாபெரும் திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நிச்சயம் நிறைவேற்றும் என நம்புவோம். நதிகள் இணைப்பு பணிகள் தொடங்கி விட்டது என்ற நற்செய்திக்காக காத்திருப்போம்.
கேள்விக்குறி ஆச்சரியக் குறியாக மாறட்டும்!



