fbpx
Homeதலையங்கம்குரங்கம்மைத் தொற்றை விரட்டத் தயாராவோம்!

குரங்கம்மைத் தொற்றை விரட்டத் தயாராவோம்!

உலகளவில், 75 நாடுகளில் 16,000 க்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கேரளாவில் மூவருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் என 4 பேருக்கு குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கம்மை நோய் அறிகுறிகள் என்னென்ன? காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் மற்றும் இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும். உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் உயிரையும் பறித்து விடும்.

இந்த நிலையில், முழு வேகத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க என்ன மாதிரியான வழிமுறையை கடைப்பிடித்தோமோ அதைப் போலத்தான், குரங்கு அம்மையிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, முகமூடிகளை அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசியை தவறாமல் போட வேண்டும்.

இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம். ஒவ்வொருவரும் இதனை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா ஆரம்பத்தில் இந்தியாவில் பரவியபோது, முதலில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது கேரளாவில் தான். ஓரிரு நபர்களுக்கே காணப்பட்ட தொற்று பின்னர் மளமளவென பரவி இந்தியாவையே பதம் பார்த்து விட்டது. பல்லாயிரம் பேர் உயிர்களை பலி கொண்டது.

அதேபோல தற்போதும் கேரளாவில் தான் முதலில் குரங்கம்மை பரவியுள்ளது. தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் கால் பதித்துள்ளது. தலைநகரில் தொற்று உறுதியாகியிருக்கும் அந்த நபர், இளைஞர் என்பதும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்பதும் கவலைகளை அதிகரிக்கிறது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டால், ஏற்கனவே நாட்டில் தொற்று பாதிப்பு ஓரளவு இருக்குமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை.

அதேவேளையில் தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருப்பது சற்றே ஆறுதல் தருகிறது.

இருப்பினும் எச்சரிக்கையாக இருந்து, இன்னும் நம்மை விட்டு அகலாத கொரோனாவில் இருந்தும் வந்து விடுவேன் என மிரட்டும் குரங்கம்மையிடம் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.

கொரோனாவோடு குரங்கம்மைத் தொற்றையும் விரட்டியடிக்கும் பணியை தொடர்வோம்!

படிக்க வேண்டும்

spot_img