தி.மு.க அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் ஒன்றுதான் அரசு பள்ளிகளில் ‘காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்‘.
1920ம் ஆண்டு திராவிட இயக்கத்தின் தாய்க் கட்சியான நீதிக்கட்சித் தலைவராக இருந்தவர் சர்.பிட்டி. தியாகராயர். இவர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக இருந்தபோதுதான் அரசு பள்ளிகளில் முதன் முதலாக மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டம் பாதியில் நின்றது. பின்னர் 1957ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் மீண்டும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து 1982ம் ஆண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டமாக மாற்றிச் செயல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1989ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் தனது ஆட்சியில் மதிய உணவுத் திட்டத்தில் முட்டை, காய்கறிகளை வழங்கி சத்தான திட்டமாகச் சத்துணவுத் திட்டத்தை மாற்றியமைத்தார்.
இதையடுத்து இன்று வரை மதிய உணவுத் திட்டத் தில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இப்படி சத்துணவு திட்டம் ஒவ்வொருவர் ஆட்சியின்போதும் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. இவர்கள் அனைவரையும் விட ஒருபடி மேலே சென்று, மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கும் முன்னோடித் திட்டமாக அறிமுகம் செய்துள்ளார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த காலை சிற்றுண்டி திட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட உள்ளது. 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 1,14,095 மாணவ, மாணவிகளுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
காலை சிற்றுண்டி பள்ளியிலேயே கிடைக்கும் என்பதால் தமிழ்நாட்டு மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி, அவசரம் அவசரமாக எதையாவது செய்து பள்ளி செல்லும் தங்கள் பிள்ளைகளை சாப்பிட வைக்க வேண்டியது இல்லை.
காலையில் சத்தான உணவுக்கு ஏதுமில்லையே என்று ஏழை பெற்றோர் கவலைப் படவும் தேவையில்லை. இந்தியாவிலேயே முதலாவதாக இந்த திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டுத் தாய்மார்கள் இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை வாயார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்; அனைத்துத் தரப்பினரும் பாராட்டுகின்றனர்.
மாணவர்களுக்குக் கல்வியை ஊட்டும் தாயுமானவராக, இந்தியாவிற்கே வழிகாட்டும் முத்தான திட்டத்தை கொண்டு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை எத்தனை பாராட்டினாலும் தகும்!



