fbpx
Homeதலையங்கம்களையெடுப்புகள் அவசியம்

களையெடுப்புகள் அவசியம்

சாதாரண பெட்டிக்கடைகள் தொடங்கி காவல் நிலையங்கள் வரை கட்டப்பஞ்சாயத்திலும், போலி பத்திரிக்கையாளர்களே முன்நிற்கின்றனர். ரியல் எஸ்டேட், மணல் கடத்தல் போன்றவற்றிலும் போலி பத்திரிக்கையாளர்கள் புது அவதாரம் எடுக்கின்றனர்.

சிலை கடத்தல் வழக்கு சென்னை ஐகோர்ட்டு இப்போது போலி பத்திரிக்கையாளர்களை புரட்டி எடுத்து வெளுத்து வாங்கியுள்ளது. போலி பத்திரிக்கையாளர்களை களைவதற்கு தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைத்திட அரசுக்கு பரிந்துரையும் செய்துள்ளது.

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அடையாளம் காட்டும் நபர்கள் மட்டுமே பத்திரிக்கையாளர்களாக இருப்பதோடு அவர்கள் மட்டுமே பத்திரிக்கையாளர்கள் சங்கங்களுக்கு தேர்தலை நடத்த முடியும்.

அவர்கள் மூலமாக மட்டுமே பத்திரிக்கையாளர்களுக்கு இலவச பஸ் பாஸ், வீட்டுமனை உள்ளிட்ட சலுகைகளை வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பில் மற்றொரு வாசகம், தினமும் 10 ஆயிரம் பிரதிகள் அச்சிடாத பத்திரிக்கைகளுக்கு அங்கீகார அட்டை வழங்க கூடாது என்பதும் வரவேற்கத்தக்கதே.

தமிழகத்தின் ஏதேனும் ஒரு மூலையில் 50 பிரதிகளை அடித்து வெளியிடும் ஒரு பத்திரிக்கைக்கு மாவட்டங்கள் தோறும் இலவச பஸ்பாஸ் பெறுவதற்காக நிருபர்கள் கூட்டம் முந்தியடிக்கிறது.

சல்லிக் காசு சம்பளமின்றி பணியாற்றும் அவர்களும், பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஊடக ஜோதியில் ஒளி வீசுகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இப்போதைய உத்தரவுகள் போலி பத்திரிக்கையாளர்களுக்கு சாட்டை அடியாக தென்படுகின்றன. இந்திய ஜனநாயகத்தின் நான்காம் தூண் நங்கூரம் பாய்ச்ச இத்தகைய களையெடுப்புகள் அவசியம்.

படிக்க வேண்டும்

spot_img