fbpx
Homeதலையங்கம்அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டது, தர்மபுரியில் பாரத மாதா கோவில் பூட்டை உடைத்த விவகாரத்தில் மாநில பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டது,

மதுரையில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வாகனம் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் என தொடர் சர்ச்சைகளில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பெயர் அடிபட்டிருக்கிறது.

கடந்த 48 மணி நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவு எதிர்கொண்ட இந்த சர்ச்சை தொடர்பாக ராமேஸ்வரம் வந்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

ஒவ்வொரு விவகாரத்திலும் தமது கட்சியின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார். மதுரையில் சனிக்கிழமை தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்ட நிகழ்வு முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதா என செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேட்டனர்.

நான் அங்கு செல்லும் முன்பே எங்களுடைய கட்சியை சேர்ந்த சிலர், தமிழக நிதி அமைச்சரின் கார் மீது காலணிகளை வீசி விட்டனர். அந்த சம்பவமானது நடந்து இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து.

பாஜகவின் சித்தாந்தத்தின்படி அந்த நிகழ்வு நடந்து இருக்கக் கூடாது. பாஜகவினர் பொறுமை காக்க வேண்டும் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்பதை தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

நேற்று தமிழக நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட நிகழ்வை பாஜக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றார் அண்ணாமலை.

தன் கட்சியினர் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அண்ணாமலை, அதிலும் ஒரு சப்பைக்கட்டு வைப்பதை மறக்கவில்லை. அமைச்சரின் பேச்சு அங்கிருந்த கட்சியினரை சூடான மனநிலைக்கு கொண்டு சென்றதன் எதிரொலியாக அப்படி நடந்துள்ளதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

அவர் இப்படித் தெரிவித்து இருப்பது, சட்டவிரோத காரியங்களில் இறங்க தனது கட்சியினருக்கு மேலும் ஊக்கம் தருவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

தேசியக் கொடி ஏற்றப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழகத்தில் அரசியல் நாகரீகம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. கடந்த காலங்களில் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள கையாண்ட அரசியல் நாகரீகத்தை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

அறவழியில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் அரசியல் போராட்டமே வெற்றியைத் தேடித் தரும்.

அடாவடி அரசியல் ஒருபோதும் வெற்றி பெறாது. முற்றுப்புள்ளி வையுங்கள்!

படிக்க வேண்டும்

spot_img