உள்ளூரில் புகழ்பெற்ற ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின.
முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியில், வழக்கம்போல ஓபனர்கள் சாய் சுதர்ஷன், என்.ஜெகதீசன் ஆகியோர் தொடர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவே முடியவில்லை.
50, 100, 150, 200 என இந்த பார்ட்னர்ஷிப் தொடர்ந்து ரன்களை குவித்து வந்தது. இறுதியில் இருவரும் அதிரடியாக சதம் கடந்ததால், 30 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 280/0 ரன்களை சேர்த்தது. இதன்பிறகும் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியவில்லை.
தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரிகள் பறந்துகொண்டேதான் இருந்தது. இதற்கு ஒரு முடிவே இல்லையா என அருணாச்சல பிரதேச பௌலர்கள் புலம்பும் அளவுக்கு பந்துகள் தொடர்ந்து பவுண்டரிகளை தொட்டுதொட்டு வந்தது.
இறுதியில் இரண்டு ஓபனர்களும் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்ஸர் உட்பட 277 ரன்களையும், சாய் சுதர்ஷன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப் 406 ரன்களை குவித்தது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆகும். ஜெகதீசன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்த இரண்டு பேரும் ஆட்டமிழந்த பிறகு பாபா இந்திராஜித், பாபா அபராஜித் ஆகியோர் தலா 31 ரன்களை சேர்த்தார்கள்.
இதனால், தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 506/2 ரன்களை குவித்து, வரலாறு படைத்தது. மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணியில் ஒருவர்கூட 20 ரன்களை தொடவில்லை.
குறிப்பாக, மூன்று பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். இதனால், அருணாச்சல பிரதேச அணி 71/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர்
லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் (498/6), மூன்றாவது இடத்தில் சர்ரே (481/4) அணியும் இருக்கிறது.
உலக அளவில், ஒரு ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுவே முதல்முறையாகும். தமிழ்நாட்டு வீரர்கள் இந்திய அணியில் பங்கேற்று ஆடினாலும் ஜொலிப்பார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதற்கான வாய்ப்புகள் தரப்பட கிடைக்கட்டும்; கிடைக்கும்.
இதெல்லாம் முடியுமா? என அனைவரையும் திகைக்க வைத்து, உலக சாதனை படைத்த தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாராட்டுகள்!



