தனியார் துறை நிறுவனங்களிலும்- கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக நிலுவையில் இருந்து வருகிறது.
இதற்கு உயிர் கொடுக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என மானியக் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு, பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நிலையில், சமூகநீதியைக் காப்பாற்றும் அரும்பணியில் தமிழக முதல்வர் இறங்கி உள்ளார். இது வரவேற்கத்தக்கது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, அங்கே உள்ள கருப்பின இதர மக்களின் வளர்ச்சி – முன்னேற்றம் சமமாக அமையவேண்டும் என்பதால், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினை செயல் படுத்துகிறார்கள்.
அரசின் அனுமதி, சலுகைகள் அனைத்தும் பெறும் தனியார் நிறுவனங்கள், மக்கள் வரிப்பணம் அது என்பதை உணர்ந்து, தாமே இட ஒதுக்கீடு தர முன்வந்து செயலாற்றி இருக்க வேண்டும்.
இனியாவது மறுப்பின்றி இட ஒதுக்கீட்டை அமல் செய்திட தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும். அதனை முறைப்படுத்த சட்டத் திருத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டாமலா போகும்?