fbpx
Homeதலையங்கம்மும்பையில் பாஜக வாங்கிய சம்மட்டி அடி!

மும்பையில் பாஜக வாங்கிய சம்மட்டி அடி!

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் நடந்த 7 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் பாஜக 4, தெலங்கானா ராஷ்டிர சமிதி, ராஷ்டிரிய ஜனதா தள், சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகியவை தலா ஒரு தொகுதியில் வென்றுள்ளன.

இதில் மிகுந்த கவனம் ஏற்படுத்திய தொகுதியாக மாறி இருக்கிறது அந்தேரி கிழக்கு. உட்கட்சி பூசலால் தவித்து கொண்டிருக்கும் நிலையில் உத்தவ் சிவசேனா, ஷிண்டே சிவசேனா ஆகிய தரப்பினர் பலமாக மோதிக் கொண்டனர். ஏக்நாத் ஷிண்டேவிற்கு வழிவிட்டு கூட்டணி கட்சியான பாஜக போட்டியிடாமல் விலகிக் கொண்டது.

இந்நிலையில் பாஜக கட்டி வைத்திருந்த கனவுக் கோட்டை இந்தத் தொகுதியில் தவிடு பொடியாகி இருக்கிறது. உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணி சார்பில் நிறுத்தப்பட்ட ருதுஜா லத்கே 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இது ஷிண்டே அணிக்கு விழுந்த பலத்த அடியாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர். கட்சி பெயரில்லை, சின்னம் இல்லை, தேர்தல் ஆணையம் கடைசி நேரத்தில் வழங்கிய தற்காலிக பெயரையும், சின்னத்தையும் வைத்துக் கொண்டு உத்தவ் சிவசேனா வென்று காட்டியுள்ளது.

இந்த வெற்றி உத்தவ் தாக்கரே தரப்பினருக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சிவசேனாவிற்குள் அணிகள் பிளவுபட்டதை அடுத்து நடந்த முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மகாராஷ்டிரா மட்டுமின்றி அண்டை மாநிலங்களும், ஏன் ஒட்டுமொத்த நாடும் உன்னிப்பாக கவனித்து வந்தது.

இத்தகைய சூழலில் தான் இடைத்தேர்தல் வெற்றி மூலம் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே எழுச்சி கண்டிருக்கிறார். இந்த வெற்றி ஒரு தொடக்கம் தான் என்று அவர் தெரிவித்துள்ளார். குதிரை பேரம் நடத்தும் பாஜகவின் அரசியலை மக்கள் நிராகரித்து உள்ளதாக காங்கிரஸ் விமர்சித்து உள்ளது.

அடுத்தகட்டமாக மும்பை மாநகராட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இது நாட்டின் மிகவும் பணக்கார மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையை தன்வசமாக்க பல்வேறு கட்சிகளும் தீவிரம் காட்டும்.

குறிப்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெற்றிக்கொடி நாட்ட பெரிதும் முயற்சிக்கும். அதற்கு பாஜகவும் சளைக்காமல் கடும் போட்டியை அளிக்கும்.

சுமார் 25 ஆண்டுகளாக மும்பையை தனது கோட்டையாக சிவசேனா தான் வைத்திருக்கிறது. தற்போது உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரு அணிகளாக பிரிந்து நிற்பதால் அங்கே ஒரு ஒரு தர்ம யுத்தம் நடைபெறப் போகிறது.

மும்பை மாநகராட்சியை உத்தவ் தாக்கரே கைப்பற்றும்பட்சத்தில் மகாராஷ்டிரா அரசியலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

படிக்க வேண்டும்

spot_img