தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யா. பள்ளி அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழக்கும் முன், தன்னை விடுதி வார்டன் சகாய மேரி திட்டியதால் தான் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார். மாஜிஸ்திரேட்டிடமும் வாக்குமூலம் தந்தார்.
அதனடிப்படையில் உடனடியாக வார்டன் சகாய மேரியை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். தடயவியல் ஆய்வு, உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மாணவியின் பெற்றோரிடம் வாக்குமூலம் பெற்று நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 37 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் மாணவி இறக்கும் வரை காத்திருந்து தாமதமாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதனையும் போலீசார் கைப்பற்றி அதில் பேசி இருப்பது மாணவி லாவண்யா தானா என்பதை அறிய ஐதராபாத் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காவல்துறை தனது கடமையை சரியாக ஆற்றி வரும் வேளையில் அதனை கொச்சைப்படுத்தும் விதமாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மதமாற்ற வற்புறுத்தலால் தான் லாவண்யா தற்கொலை செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
அதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தையும் கையிலெடுத்தார். அரசியல் ஆதாயம் கருதி இதை அவர் செய்வதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
போலீசார் விசாரணையிலும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையிலும் தற்கொலைக்கு மத மாற்றும் முயற்சி காரணமல்ல என்பது தெளிவாகி இருக்கிறது. இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிசிஐடி விசாரணை வேண்டும் எனக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.
இப்படி தமிழக அரசும் நீதிமன்றமும் விசாரணை நடத்தி வரும் வேளையில், பிரச்சினையை தேசிய அளவிற்குக் கொண்டுபோய், மாணவி மரணம் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை அகில இந்திய பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நியமித்துள்ளார்.
இதற்கு என்ன அவசியம் வந்தது? தமிழக அரசை அவமானப்படுத்துவதைத் தவிர வேறென்ன? தமிழக அரசின் விசாரணை மீது அண்ணாமலைக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது அல்லவா? தீர்ப்பு வரட்டுமே, அதுவரை காத்திருக்க முடியாதா-?
சிபிசிஐடி விசாரணை வேண்டுமா, வேண்டாமா? என்பதை உயர்நீதிமன்றமே முடிவு செய்யட்டும். எதுவாக இருந்தாலும் ஏற்போம்; முறையான விசாரணை மூலம் உண்மை வெளிவரட்டும்.
தமிழகத்தில் மத மோதலுக்கு வித்தூன்றி விடாதீர்கள்!



