fbpx
Homeதலையங்கம்தேசியக் கொடியேற்றி தேசபக்தி வளர்ப்போம்!

தேசியக் கொடியேற்றி தேசபக்தி வளர்ப்போம்!

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15-ம் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தின் மீது அமைந்துள்ள உயர்ந்த கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றவுள்ளார். அதேநாளில் இந்தியா முழுக்க அந்தந்த மாநில முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றுவார்கள்.

இப்போது சாதாரண நிகழ்வாக இருக்கும் இது ஒரு காலத்தில் அசாதாரணமாக இருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு கிடைத்த இந்த உரிமை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் போராட்டத்தின் காரணமாக கிடைத்தது என்பதும் பலருக்கு தெரியாது.

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்குத் தரவேண்டும் என 1974 பிப்ரவரியில் கோரிக்கை விடுத்தார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.

குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரும், சுதந்திர தினத்தன்று பிரதமரும் தேசியக் கொடி ஏற்றி வைப்பது போல, குடியரசு தினத்தன்று மாநில ஆளுநரும் சுதந்திர தினத்தன்று மாநில முதல்வரும் கொடியேற்றலாம் என்ற வாதத்தை கலைஞர் முன்வைத்தார்.

கலைஞரின் யோசனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டிய நிலையில், சற்று எதிர்ப்பு இருந்தாலும் கலைஞரின் இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் கொடியேற்றலாம் என்ற ஆணையை வெளியிட்டார்.

அதன்படி 1974 ஆகஸ்டு 15 தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றுவதற்கான உரிமைக்குரல் தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில் ஒலித்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் கலைஞர் மு.கருணாநிதி.

அப்படி மு.கருணாநிதி முதன்முறையாகத் தேசியக்கொடியை ஏற்றிவிட்டுத் திரும்பும்போது எடுத்த புகைப்படத்தைத்தான் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முகப்படமாக வைத்துள்ளார்.

மாநில உரிமைகளை வென்றெடுப்பதில் கைதேர்ந்தவர் கலைஞர் கருணாநிதி. 75 வது சுதந்திர தினத்தை குதூகலமாகக் கொண்டாடத் தயாராகும் நாம், கருணாநிதியின் நினைவு நாளில் அவரை நினைந்து போற்றுவோம்.

மேலும் அனைவரும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் தேசியக்கொடி ஏற்றி 75வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவைக் கொண்டாட அனுமதி தரப்பட்டுள்ளது. வருகிற 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியேற்றி கொண்டாடி மகிழ்வோம்.

தேச பக்தியை வளர்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img