தமிழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரை விற்கு ஒப்புதல் தர மறுத்து, தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதி இருக்கிறார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் தர ஆளுநர் மறுப்பது ஏன்? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விடவும் தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக அவர் கருதுகிறாரா?
குஜராத், தெலங்கானா மாநிலங்களில் துணை வேந்தர் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன.
அங்கு விதிமுறைகளின்படியே நியமனங்கள் நடக்கின்றன. அதையே தமிழ் நாட்டிலும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. மசோதா நிறைவேறினால் ‘அரசியல் தலையீடு’ வந்துவிடும் என ஆளுநர் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை, மாநில முதல்வரை ஆளுநர் நம்ப வேண்டாமா? பிறகு தேர்தல் எதற்கு? வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு எதற்கு?… புரியவில்லை. குஜராத்திற்கு ஒரு நியாயம்? தமிழகத்திற்கு ஒரு நியாயமா?
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநர் நியமித்த முறைகேடான துணைவேந்தர்களை நீதிமன்றம் தலையிட்டு பதவி நீக்கம் செய்ததே. அது ஏன் நடந்தது?
மாநிலப் பல்கலைக்கழகத்தில், ஜனநாயக விரோதமான அரசியலை புகுத்துவதே ஆளுநராக இருந்து விடக்கூடாது. துணை வேந்தர்களுக்கு தனி மாநாடு நடத்துவது, உயர்கல்வித் துறை அமைச்சரையே ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழா நடத்துவது என்று தனி ராஜ்ஜியம் நடத்த முற்படுவதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த பின்னணியில்தான் மாநில அரசுக்கு புதிய சட்டம் நிறைவேற்றிடும் தேவை எழுந்தது.
ஒன்றிய அரசுடனும் ஆளுநருடனும் சுமூகமான உறவு நீடித்து, அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு தடையாக யார், யார் இருந்தாலும் அவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்!



