இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் சாதனைகள் மீதும், மைல்கல் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர்கள் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கும். இவ்வளவு ஏன், ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் கூட இந்திய அணி வீரர்களை, சதமடிப்பதற்காக அதிக பந்துகளை வீணாக்குவார்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதனை உண்மையாக்கும் வகையில் உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியின் வெற்றி, நெட் ரன் ரேட்டை விடவும் சொந்த சாதனைகள் முக்கியம் என்ற அளவிற்கு எல்லை மீறியுள்ளது.
நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், விராட் கோலி 97 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனிடையே நசும் அஹ்மத் வீசிய 42வது ஓவரின் முதல் பந்திலேயே வெற்றிபெற வாய்ப்பு கிடைத்த நிலையில், விராட் கோலி சிங்கிள் ஓடாமல் க்ரீஸிலேயே நின்றார். இதன்பின் 3வது பந்தில் சிக்சர் அடித்து விராட் கோலி தனது 48வது சதத்தை விளாசினார். இதனால் விராட் கோலி சதம் விளாசுவதற்காக சுயநலமாக இருந்தார் என்ற விமர்சனங்கள் எழுந்தது.
அதேபோல் வெற்றி உறுதி என்று தெரிந்த பின்னர் அதிரடியாக விளையாடாமல் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலும் வேண்டுமென்றே வெற்றியை தாமதப்படுத்தியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உலகக்கோப்பையில் இந்திய அணியின் நெட் ரன் ரேட்டை விடவும் சொந்த சாதனை முக்கியமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த ஆட்டத்தை 2 ஓவர்களுக்கு முன்பாக முடித்திருந்தால், இந்திய அணியின் நெட் ரன் ரேட் நியூசிலாந்து அணிக்கு அருகில் சென்றிருக்கும். உலகக்கோப்பை போன்ற நீண்ட தொடர்களில் ரன் ரேட் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
இரு அணிகள் ஒரே புள்ளியில் இருந்தால், நெட் ரன் ரேட்டை வைத்து தான் எந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது முடிவாகும்.
இதனால் இந்திய அணி வீரர்கள் சுயநலமான ஆட்டத்தை உலகக்கோப்பை தொடரிலாவது கைவிட வேண்டும் என்று கிரிக்கெட்டை உயிர்போல பார்க்கும் இந்திய ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விராட் கோலி சிங்கிள் ரன் ஓடாதது ஏன் என்று நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசுகையில், 42வது ஓவரில் விராட் கோலி சிங்கிள் ரன் எடுப்பதற்கு அழைத்த போது, நானே வேண்டாம் என்று கூறினேன்.
அப்போது கூட விராட் கோலி, இந்த சிங்கிளை எடுக்காவிட்டால் தவறாக இருக்கும். சொந்த சாதனைகளுக்காக விளையாடுகிறார் என்று ரசிகர்கள் நினைத்து கொள்வார்கள் என்று கூறினார்.
ஆனால், நாம் மிகச்சிறந்த சிறந்த வெற்றியை அடைகிறோம். அதனால் சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைகளுக்கு இடையே சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 48 சதங்கள் அடித்த வீரர், அதிவேகமாக சர்வதேச அளவில் 26 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். அதற்காக அவரைப் பாராட்டுவோம்.
இந்திய அணி விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் பலம் வாய்ந்த அணிகள் என்றால் ஆஸ்திரேலியாவையும் பாகிஸ்தானையும் சொல்லலாம்.
ஆனால் இவ்விரு அணிகளும் சமீப காலமாக நல்ல ஃபார்மில் இல்லை. அடுத்ததாக இந்தியா வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் தான்.
அவர்களை பலமான அணிகள் என்று ஒப்புக்கொள்ள முடியாது. இந்த நான்கு போட்டிகளிலும் இந்தியாவுக்கு சாதகமான முடிவு வந்தாலும், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிகளை எதிர்கொள்ள வேண்டி யதிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இனி வரும் போட்டிகளிலாவது சர்ச்சைகளுக்கும் சுயநலத்திற்கும் இடம் தராமல் இந்திய வீரர்கள் களம் காண வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
கோப்பையைக் கைப்பற்றும் வரை இந்திய அணியின் வெற்றி தொடரட்டும்!