fbpx
Homeதலையங்கம்ஆன்லைன் ரம்மிக்கு தடை வருமா, வராதா?

ஆன்லைன் ரம்மிக்கு தடை வருமா, வராதா?

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் உள்நுழையும் வாடிக்கையாளர்கள், முதல் வெற்றி பெற்று குறிப்பிட்ட அளவில் பணம் சம்பாதித்த பின்னர் அடுத்து அவர்கள் வெல்லவே முடியாது என்பது மறைக்கப்பட்ட விதி.

முதலில் வெற்றி பெற்றவர்கள், தொடர் தோல்விகளை சந்தித்தபின்னர் கடன்களை வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடுகின்றனர். விட்ட காச பிடிச்சிடணும் என எண்ணும் வாடிக்கையாளர்கள், அதிகரிக்கும் கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துவருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் இது வரை 44 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.
இதன்பின் தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பதால் நேரிடும் தற்கொலைகளைத் தடுக்க வலுவான புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேறியது. பிறகு ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த அவசர சட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி காலாவதியானது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவை 4 மாதங்கள் 11 நாட்கள் பரிசீலனையில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் தற்போது அதை நேற்று தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநரின் இந்த போக்கு சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது, இது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பதிவில், ஆளுநர் இட்லி சுடவோ, தோசை சுடவோ தமிழ்நாட்டிற்கு வரவில்லை. மாநில உரிமையை சுடவே வந்துள்ளதாகவும் தருமபுரி திமுக நாடாளுமன்ற எம்பி செந்தில்குமார், ‘‘இந்தமாதிரியான ஜோக்கர்களிடம் இருந்து வேறு என்ன நாம் எதிர்பார்க்க முடியும்’’ எனவும் சாடி உள்ளனர். அதேபோல் கட்சி சாராத பலரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

திருப்பி அனுப்பப்படும் மசோதா, ஆளுநரின் யோசனைகளுடன் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தால் அதற்கு அவர் ஒப்புகை வழங்குவது கட்டாயமாகும். அதுவே மாநில அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்ட அவசர சட்டமாக இருந்தால் அதை தாமதிக்காமல் ஒரு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அது சட்ட நியதி.
இது ஒருபுறமிருக்க, பொதுஜன நலனைப்பற்றி ஆளுநர் கவலைப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு மாநில அரசுக்கு 5 ஆண்டுகள் தான் மக்கள் அதிகாரம் தருகிறார்கள். தமிழ்நாடு அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி 4 மாதங்களுக்கு பிறகு அவர் நிராகரித்து திருப்பி அனுப்புகிறார். இதைப்பார்க்கும்போது ஐந்தாண்டு கால ஆட்சியில் நாலைந்து மசோதாக்களை கூட மாநில அரசால் தற்போதைய ஆளுநரிடம் ஒப்புதல் பெற முடியுமா? என்பதே மக்கள் மனதில் பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது.

இப்படிப்பட்ட போக்கு மாநில மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்பதை அனைத்துதரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மசோதாவை ஆய்வு செய்து திருப்பி அனுப்ப மாதக்கணக்கில் நேரம் தேவைப்படுகிறது என்றால் ஆளுநருக்கு இதைவிட முக்கியப் பணி வேறென்ன? யாரைக்குற்றம் சொல்வது? நினைத்தால் ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பலாமே? என கேட்டு பொதுமக்கள் தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை போலும்.
அதனால் தான், நாட்டுக்கு ஆளுநரும் ஆட்டுக்கு தாடியும் அவசியம் இல்லை என்று அன்றே பேரறிஞர் அண்ணா சொன்னார்.
பிரிட்டீஸ் ஏகாதிபத்திய நடைமுறைகள் பலவற்றை மாற்ற வேண்டும் என்று தானே ஒன்றிய பாஜக அரசு பேசி வருகிறது. முதலில் இந்த ஆளுநர் பதவியை ஒழிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு முன்னெடுக்குமா?

படிக்க வேண்டும்

spot_img