இந்தியாவின் சிலிகான் வேலி என்ற அழைக்கப்படும் நகரம் பெங்களூரு. பெரும்பாலும், ஐடி துறையில் கோலோச்சும் சர்வதேச நிறுவனங்களின் இந்திய கிளைகள் பெங்களூருவிலேயே அமைந்துள்ளன.
இங்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐ.டி. துறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு இயற்றியுள்ளது. அதில், ’கர்நாடகாவில் உள்ள அனைத்துத் தனியார் நிறுவனங்களிலும் நிர்வாகப் பணிகளில் 50 சதவீதமும், நிர்வாகம் சாராத பணிகளில் 75 சதவீதமும் கன்னடர்களை பணியமர்த்த வேண்டும். சி மற்றும் டி பிரிவு வேலைகளில் 100 சதவீதம் கன்னடர்களுக்கே ஒதுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா, நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யும் நிலையில், இதற்கு மாநில அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது.
இதற்கு இன்போசிஸ், மணிபால், பயோகான் உள்ளிட்ட பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, நாஸ்காம் எனப்படும் தேசிய ஐடி நிறுவனங்களுக்கான சங்கம், ஏற்கெனவே எட்டப்பட்ட வளர்ச்சி தடம்புரளாமல் தடுக்க ஐடி நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான கட்டுப்பாடுகள் ஐடி நிறுவனங்களை வேறு மாநிலங்களை நோக்கி நகரச் செய்துவிடும் என்றும் நாஸ்காம் எச்சரித்துள்ளது.
கர்நாடக அரசு கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றினாலும் அமல்படுத்துவது கடினம்.
ஏற்கெனவே, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டு, இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அவை எதிரானது என நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காவிரிநீர் பிரச்னையில் தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுப்பதுபோல முரண்டுபிடிக்காமல் எதிர்ப்புக்கு பணிந்து கர்நாடகாவில் தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலைவாய்ப்பு தர வேண்டும் என்கிற மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் மொழிவாரியாகத் தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கர்நாடகாவைப் போல பிற மாநிலங்களும் இதேபோல தனியார் நிறுவனங்களில் அவரவர் மொழிக்காக இடஒதுக்கீடு அமலாக்க முயன்றால் என்னவாகும்?
இந்தப் போக்கை முழுமையாக கைவிட்டு, கன்னடர்களின் உயர்கல்வித் திறனை மேம்படுத்தும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கி பயிற்சி அளிக்கலாம். அதைவிடுத்து திறமையான பணியாளர்களை விரும்பும் தனியார் நிறுவனங்களை நிர்ப்பந்திப்பது எந்த வகையில் நியாயம்?
தாய் மொழிக்காக சலுகைகள் வழங்கலாம்… ஆனால் இடஒதுக்கீடு அதிலும் 100 சதவீத இடஒதுக்கீடு என்பது மிக மோசமான முன்னுதாரணமாகி விடும்.
முதல்வர் சித்தராமையா சிந்தித்து செயல்பட வேண்டும்!