கர்நாடக சட்டசபை தேர்தல் 2023, ஆளும் கட்சியான பாஜகவுக்கும், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும், முக்கி யத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது.
தென்மாநிலங்களில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்த மாநிலமாக, காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக உள்ள மாநிலமாக, ஜனதா இயக்கங்களுக்கு எப்போதும் உயிரளிக்கும் மாநிலமாக சிறப்புற்று நிற்கிறது கர்நாடகா. அடுத்த ஆண்டில் நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் கர்நாடக தேர்தல் 2023 பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிக ளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பாஜக சார்பில் 224 பேர், காங்கிரஸ் சார்பில் 223 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 209 பேர், இதைத்தவிர ஆம் ஆத்மி, ஸ்டிபிஐ, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் அனல் பறக்கும் வகையில் தீவிர களப்பணியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா, எடியூரப்பா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொண்டனர். பிரதமர் மோடி 7 நாட்கள் முகாமிட்டு ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களை தன்பக்கம் இழுத்தார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, மூத்த தலைவர் இப்ராஹிம் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
கர்நாடகத்தில் 38 ஆண்டுகளாக, ஆளும் கட்சி, தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சியமைக்கவில்லை என்ற வரலாறுதான் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கே தேர்தல் களத்தில் வெற்றி என்று பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூறி வருகின்றன.
முன்னணி மீடியாக்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் கருத் துக்கணிப்புகள் பொய்யாகிப் போவதும் ஒருசில நேரங்களில் நடந்து விடுகிறது. ஆளுங்கட்சியான பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்தாலும் அதன் பலத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது காங்கிரசா, பாஜகவா? முதலமைச்சராகப் போவது சித்தராமைய்யாவா, மீண்டும் பசவராஜ் பொம்மையா? என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்!



