சில வாரங்களாக திட்டங்கள், வாக்குறுதிகள், குற்றச்சாட்டுகள் என சூடு பறந்த பிஹார் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாகத்பந்தன் (மெகா) கூட்டணி, ஜன் சுராஜ், மகா ஜனநாயகக் கூட்டணி என நான்குமுனைப் போட்டி உள்ளது. பிரதமர் மோடி, ராகுல்காந்தி என தலைவர்கள் பலரும் களமிறங்கி பிரசாரம் செய்து சென்றுள்ளனர்.
இதில் எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் பிராந்திய மற்றும் தேசியக் கட்சிகள் என 7 கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன.
மாநிலத்தில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் தேஜஸ்விக்கான ஆதரவை அதிகளவில் பார்க்க முடிகிறது.
தேஜஸ்வி துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் வேலைவாய்ப்புகளை வழங்குவது மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். அவர் துணை முதலமைச்சராக இருந்த அந்த 17 மாதங்களில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இளம் வாக்காளர்கள் மத்தியில் தேஜஸ்வியின் இத்தகைய செயல்பாடுகள் எதிரொலித்திருக்கின்றன.
ஆரம்ப கட்டத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதிலும், தொகுதி பங்கீடு விவகாரத்திலும் மகாகத்பந்தன் கூட்டணியில் சிக்கல்கள் இருந்தாலும், தேஜஸ்வி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே, அடுத்த முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கருத்துக்கணிப்புகளில் பிஹார் மக்கள் பெருமளவிலான ஆதரவை தேஜஸ்விக்கு வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
யாதவ சமூகம் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குவங்கி ஆர்ஜேடிக்கு பலம்.
கிட்டத்தட்ட 17.7% இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கும் நிலையில் இது ஆர்ஜேடிக்கே பலம்,. யாதவ சமூகத்தின் வாக்குகளையும் சேர்த்தால் கிட்ட்டத்தட்ட 30% வாக்குகள் மொத்தமாக இருக்கின்றன.
ஒரு காலத்தில் அம்மாநிலத்தில் இருக்கும் பட்டியல் சமூக மக்களிடம் காங்கிரஸ் கட்சியே செல்வாக்குடன் இருந்தது. இடையில் நிதிஷ் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் அம்மக்களின் வாக்குகளை குறிப்பிடத்தக்கவகையில் தன்பக்கம் திருப்பியிருந்தாலும், மீண்டும் தற்போது காங்கிரஸ் தனக்கான ஆதரவை மீட்டு வருகிறது.
இளம் தலைவர்கள் மற்றும் இளம் வாக்காளர்களால் பிஹார் மாநிலம் நிறைந்திருந்தாலும், மகாகத்பந்தன் கூட்டணி வாரிசு அரசியல் எனும் விமர்சனத்தை மிகக் கடுமையாக எதிர்கொள்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் தற்போது வரை ஜங்கிள் ராஜ் என்பதைக் குறிப்பிட்டு பேசுகின்றனர். மக்கள் மத்தியில் ஆர்ஜேடி ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மக்கள் மத்தியில் இன்னும் நினைவிலிருப்பதால் மகாகத்பந்தனுக்கு இது பின்னடைவான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பிஹார் மாநிலத்தின் ஒவ்வொரு தேர்தலிலும், வெற்றி தோல்விக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைந்துகொண்டே வருகிறது. இத்தகைய சூழலில் காங்கிரஸ் ஆர்.ஜே.டி ஏறத்தாழ 9 தொகுதிகளில் தங்களுக்குள்ளாகவே போட்டியிடுகின்றன. இது மகாகத்பந்தன் கூட்டணியை நேரடியாகவே பாதிக்கும் ஒன்று.
அதே நேரத்தில் ஏறத்தாழ நிதிஷின் 20 ஆண்டுகால ஆட்சியில், மாற்றம் வேண்டுமென மக்கள் நினைப்பது மகாகத்பந்தன் கூட்டணிக்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது
வேலைவாய்ப்பு பிரச்னைகள் உச்சத்தில் இருப்பதால், ஆர்ஜேடி சமூக நீதி மற்றும் வேலைவாய்ப்பு எனும் கருப்பொருளில்தான் தேர்தல் அறிக்கையையே வெளியிட்டிருக்கிறது.
இளைஞர்கள் அதிகமிருக்கும் மாநிலத்தில் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அரசு வேலை போன்ற வாக்குறுதிகள் மகாகத்பந்தனுக்கு கைகொடுக்கக்கூடிய வாய்ப்புகளாக இருக்கின்றன.
மாநிலத்தில் அதிகமிருக்கும் இளம் வாக்காளர்களை தன்பக்கம் திருப்புவதற்கு பிரசாந்த் கிஷோர் முயற்சி செய்திருக்கிறார். இஸ்லாமிய சமூக வாக்குகள் ஆர்ஜேடிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அந்த வாக்குகளை பிரிக்க ஓவைசி களத்தில் இருக்கிறார்.
கடந்த தேர்தலிலும் மூன்றாவது அணியாக போட்டியிட்ட நிலையில், இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக தொகுதிகளை வென்றது. தேஜஸ்வியின் சகோதர் தேஜ் பிரதாப் ஆர்ஜேடிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.
ஆக, பிஹார் தேர்தலில் ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணிக்கும் இடையே தான் கடுமையான போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிஹார் மக்கள் தங்கள் ஒற்றை விரலால் இன்று முத்திரை பதிக்கத் தொடங்கி விட்டனர். வெளியாகப் போகும் பரபரப்பான தேர்தல் முடிவுக்காக காத்திருப்போம்.
பிஹாரில் நல்லாட்சி மலரட்டும்!



