வயநாடு மலைப் பகுதிகளான சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட இடங்களில் 6 நாட்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் 380-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோரின் கதி என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை.
வயநாடு மலைப் பகுதிகளில் கடந்த 8 நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின் றன. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன், கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், மக்களவை எதிர்க் கட்சித் தலைவரும் வயநாடு தொகுதி முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியு றுத்தி வருகின்றனர். வயநாடு மலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை பார்வையிட்ட மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்டரீதியான வாய்ப்புகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது எனத் தெரிவித்திருந்தார். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான வி.முரளீதரன், வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்கவே முடியாது என முந்திரிக் கொட்டை போல கருத்து தெரிவித்துள்ளார்.
அதோடு நிற்காமல் முரளீதரன், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்த முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், நிலச்சரிவு உள்ளிட்டவைகளை தேசியப் பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடம் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்த பழைய கதையைச் சொல்லி சுட்டிக்காட்டி இருக்கிறார். வயநாட்டில் தோண்டத் தோண்ட சடலங்கள் இன்னும் வந்து கொண்டிருக்கும்போது, முந்தைய முன்னுதாரணங்களை சுட்டிக்காட்டி மறுப்பதற்கு இது என்ன அரசியல் களமா?
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டபோது, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதெல்லாம் தேசியப் பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமே இல்லை என்றார். அப்போது தேசியப் பேரிடர் அறிவிப்பு எப்போது சாத்தியம் என்கிற விவாதங்கள் நடந்தன. இப்போதும் தேசியப் பேரிடர் என்றால் என்ன? எந்த மாதிரியான நிகழ்வுகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியும்? அதற்கான இலக்கணம் என்ன? என்பது குறித்து வயநாடு நிலச்சரிவை வைத்து விவாதம் நடந்து வருகிறது.
வயநாடு நிலச்சரிவு பேரழிவைத் தந்திருக்கிறது. கடந்தாண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங் களைப் புரட்டிப்போட்ட பெருமழை வெள்ளம், சென்னையை சூறையாடிய மைச்சாங் புயல்- வெள்ளத்தை விட வயநாடு நிலச்சரிவு சோகம் கொடுமையானது. இதனைக்கூட தேசியப் பேரிடராக அறிவிக்காவிட்டால் வேறு எதைத் தான் அறிவிப்பது? தேசியப் பேரிடர் என்பதை அறிவிப் பதற்கான அப்படியொரு சம்பவம் எப்படி இருக்க வேண்டும்?
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு கைவிரிக்கிறது. அப்படியானால் எது தான் தேசியப் பேரிடர் என்பதற்கான குழப்பமில்லாத விளக்கம்மூலம் மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் தேசியப் பேரிடர் என்றால் என்னவென்று நாட்டுமக்களுக்கு தெரியவில்லை; புரியவில்லை. அதனை விளக்கி விட்டால் மக்களுக்கும் குழப்பம் தீரும் – முதலமைச்சர்களும் தேசியப் பேரிடராக அறிவியுங்கள் என்று தங்கள் மாநிலத்தில் நடந்த இயற்கைச் சீற்றத்திற்காக கோரிக்கை வைத்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை அல்லவா?