உலகக்கோப்பைக்கான இந்தியா & நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி தனது 50வது சதத்தைப் பதிவு செய்திருந்தார்.
இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார். கோலிக்கு சச்சின்தான் ஹீரோ. அவருடைய சாதனையை முறியடித்துவிட்டு மைதானத்திலிருந்த அவருக்கே தலைவணங்கி மரியாதை செய்து அந்தத் தருணத்தையே உணர்வுபூர்வமானதாக மாற்றினார் கோலி.
இந்நிலையில், இந்திய அணியின் பேட்டிங் முடிந்த பிறகு கோலி உணர்ச்சிவசப்பட்டு சில விஷயங்களை ரசிகர்கள் மத்தியில் பேசியிருந்தார்.
“இப்படி ஒரு தருணம் நிகழும் என நினைத்துப் பார்த்ததே இல்லை. எல்லாமே கனவு போல இருக்கிறது. நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன்.
இந்தத் தொடர் முழுவதும் எனக்கு என்ன பணி கொடுக்கப்பட்டதோ அதே பணிதான் இன்றைக்கும்! நின்று நிதானமாக பெரிய இன்னிங்ஸை ஆடினேன். எல்லாமே இன்று நல்லவையாக நடந்திருந்தன. அணியை வெல்ல வைக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்ய வேண்டும்.
இதுதான் என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்என கோலி உணர்ச்சி வசப்பட்டார். மேலும், இன்று என் மனைவி என் முன் இருந்தார். எனக்கு ரொம்பவே பிடித்த என்னுடைய ஹீரோ சச்சின் என் முன் இருந்தார். அவர்கள் முன் இப்படியொரு தருணம். என்னால் இதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.
என்னுடைய வாழ்க்கையை ஓர் ஓவியமாக வரைந்தால் இந்தத் தருணத்தைத்தான் காட்சிப்படுத்த விரும்புவேன்” என்றும் தெரிவித்திருந்தார். ஆட்டம் முடிந்ததும் கோலியை அணைத்தபடி தனது வாழ்த்தை தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், இந்த சாதனையால் பெருமிதம் கொள்வதாக முகம் மலர வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிறந்த விளையாட்டுத்திறனை வரையறுக்கும் சிறந்த மற்றும் விடாமுயற்சியின் உணர்வை எடுத்துக்காட்டி உள்ளார் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நம்பமுடியாத சாதனை! 50 ஒருநாள் சதங்கள்! விராட் கோலி, நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம் என தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.
விராட் கோலியின் சாதனைகள் தொடர நாமும் வாழ்த்துவோம்!



