விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சனிக்கிழமை இரவு பலர் விஷச் சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
குறைந்த விலைக்கு மது கிடைக்காததால், , தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தக் கூடிய எத்தனால் மற்றும் மெத்தனால் கலந்த எரிசாராயத்தை சாப்பிட்டுள்ளது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காவல்துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார்.
எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளை சஸ்பெண்டு செய்தும் இடமாற்றம் செய்தும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இந்தப் பிரச்சனையின் மூல காரணங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழித்திடுவதற்கு ஏதுவாக இந்த வழக்குகளின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை பாராட்டத் தக்கது. ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் பரவலாக இருந்தும் கூட கள்ளச்சாராய சாவு அதிக எண்ணிக்கையில் நேரிட்டிருப்பது பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் கடைகளை குடிமகன்கள் தவிர்க்க என்ன காரணம்? ஆபத்து இருக்கலாம் என்று தெரிந்தும் கூட விலை குறைவு என்ற ஒரே காரணத்திற்காக கள்ளச்சாராயத்தை பலரும் நாடிச் செல்வது ஏன்? கள்ளச்சாராயத்திற்கும், அதனால் நேரிடும் உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாதா?
மது விலக்கு அமலில் உள்ள குஜராத், பீகார் போன்ற மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து கொத்துக்கொத்தாக உயிரிழப்புகள் நேரிடுவதை அவ்வப்போது நாம் செய்திகளில் பார்த்திருக்கிறோம்.
தமிழ்நாட்டை பொருத்தவரை, சமீபத்திய ஆண்டுகளில் அதுபோன்ற உயிரிழப்புகள் இல்லை என்ற நிலையே இருந்து வந்தது. இங்கு டாஸ்மாக் கடைகள் செயல்படுவதே அதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், மரக்காணம் சம்பவம் மது பிரச்னை மீதான ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றியுள்ளது.
மதுவிலக்கு குறித்த இன்றைய தமிழ் சமூகத்தின் பார்வை என்ன? மதுவை தவறான விஷயமாக பார்க்கும் கலாசாரம் இன்று இல்லை. ஆகவே, மதுப் பழக்கத்தை ஒழுக்கம் சார்ந்த பிரச்னையாக கற்பிப்பதைக் காட்டிலும், அதனை உடல் நலம், மனநலம் சார்ந்த பிரச்னையாகவே அணுக வேண்டும்.
மதுவின் தீமைகளை அறிந்து ஒவ்வொரு தனிநபரும் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இது உடனடியாக நடக்கக்கூடிய விஷயம் அல்ல. ஆனால் அந்த முயற்சியைத் தொடங்க வேண்டிய அவசியத்தை மரக்காணம் சம்பவம் நினைவூட்டுகிறது.
மரக்காணம் உயிரிழப்புக்குப் பிறகு நடந்த போலீஸ் சோதனையில் கள்ளச்சாராய வழக்குகளில் 1558 பேர் இரு நாட்களில் கைதாகி உள்ளனர். 4943 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு உள்ளது. கள்ளச்சாராயம் உற்பத்தி ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.
ஆக, கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழிக்க வேண்டிய நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்த வேண்டும். அந்த பொறுப்பு முழுவதும் காவல்துறையையே சாரும். மாநிலத்தில் கள்ளச்சாராயமே இல்லை என்ற அளவிற்கு அதிரடிச் சோதனைகள் தொடர வேண்டும்.
அப்போது தான் இதுபோன்ற உயிர்ப்பலிகளைத் தவிர்க்க முடியும்!



