உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.
பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளாக நேற்று மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. உணவு பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை மற்றொரு குழாய் வழியாக விநியோகிக்கப்படுகிறது. வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களுடன் அதிகாரிகள் அவ்வப்போது பேசி வருகின்றனர்.
தற்போது சுரங்கப் பாதையை மூடியுள்ள மணல் குவியலில் பக்கவாட்டில் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி எர்த் ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிட்டு ராட்சத இரும்பு குழாய்கள் சொருகப்பட்டு வருகின்றன. இந்த இரும்பு குழாய் இணைப்பு வழியாக 40 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் நேற்று ஒரு காகிதத்தில் தங்கள் சூழ்நிலையை எழுதி குழாய் வழியாக மீட்புப் படை அதிகாரிகளுக்கு அனுப்பினர். அதில், “ஆக்சிஜன் போதுமான அளவு இருக்கிறது. போதிய வெளிச்சம் இருக்கிறது. வாக்கி டாக்கியை இயக்க தேவையான பேட்டரிகள் உள்ளன.
குடிநீர் போதுமான அளவில் உள்ளது. குழாய் வழியாக அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் தொழிலாளர்களின் பசிக்கு போதுமானதாக இல்லை. கூடுதல் உணவுப் பொருட்களை குழாய் வழியாக அனுப்ப வேண்டும்’’ என்று கோரப்பட்டு உள்ளது.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று 2-வது நாளாக சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். 40 தொழிலாளர்களும் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இன்று 4வது நாளாக மீட்புப்பணி நடந்து வருகிறது. 40 தொழிலாளர்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற போதிலும் அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
இனியாவது இதுபோன்றதொரு சம்பவம் மீண்டும் நடக்காதவாறு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் ஒன்றிய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
இன்று மாலைக்குள் தொழிலாளர்களை மீட்க இலக்கு நிர்ணயித்து தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது. அருகில் சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டள்ளது. 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.
சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 40 தொழிலாளர்களும் மிக விரைவில் பத்திரமாக மீண்டுவர இறைவனைப் பிரார்த்திப்போம்!



