அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஜோபைடன் அறிவித்தார். மேலும், தனக்குப் பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிட ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார். கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து அவர் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் அவரது வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அடுத்த அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்பைவிட முன்னிலை பெற்றுள்ளார் என்பது தான் அந்த செய்தி.
சர்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘இப்ஸோ’சுடன் இணைந்து ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் டிரம்ப்பை விட கமலா ஹாரிஸுக்கு கூடுதலாக 2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்ததற்கு மறுநாளான திங்கள்கிழமையும் அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீதம் பேரும் டொனால்ட் டிரம்ப்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஜோபைடன் போட்டியில் இருந்து விலகுவதற்கு முன் நடந்த கருத்துக் கணிப்புகளில் டிரம்ப் தான் முன்னிலையில் இருந்தார். ஆனால் ஜோபைடன் விலகலுக்கு பிறகு தற்போதைய நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபரானபோதே இந்தியா குதூகலித்தது. ஏனெனில் அவர் ஒரு இந்திய வம்சாவழி. அதுவும் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறிய விவசாய கிராமமான துளசேந்திரபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் தமிழர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது.
தற்போது கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கே போட்டியிடப்போகிறார் என்ற செய்தி கேட்டு துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவரது வெற்றிக்காக ஆலயங்களில் சிறப்பு பூஜை செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார், என்றாவது ஒருநாள் தங்கள் கிராமத்திற்கு அவர் வருவார் என்ற எதிர்பார்ப்புடன் துளசேந்திரபுரம் மக்கள் காத்திருக்கிறார்கள்.
அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றால் இந்தியா – அமெரிக்கா நல்லுறவு மேலும் வலுப்படும் என்பதில் சந்தேகமில்லை.
கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்துகள்!