fbpx
Homeதலையங்கம்மு.க.ஸ்டாலின் உடைத்த உண்மை- உள்அர்த்தம்!

மு.க.ஸ்டாலின் உடைத்த உண்மை- உள்அர்த்தம்!

அமைச்சர் செந்தில்பாலாஜியைத் தொடர்ந்து இன்னொரு திமுக அமைச்சர் பொன்முடி மீது பாய்ந்திருக்கிறது அமலாக்கத் துறை. அதுவும் கடந்த முறை நடந்தது போலவே, முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்றிருக்கும் வேளையில் களமிறங்கி இருக்கிறார்கள்.

காலை 10 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 3.30 மணி வரை அமைச்சர் பொன்முடியிடம் விசாரித்து இருக்கிறார்கள். அவருக்கு வயது 72. ஏற்கனவே உடலில் பல சில பிரச்சனைகள் உள்ளன.

இந்த 21 மணி நேர விசாரணை அவருக்கு எப்படிப்பட்ட ஒரு மன உளைச்சலை, உடல் உளைச்சலை கொடுத்திருக்கும்?
மனிதாபிமானமற்ற முறையில் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பல முறை எச்சரித்து இருக்கிறது.

ஆனால், எதைப் பற்றியும் அமலாக்கத்துறை கவலைப்படுவதாக தெரியவில்லை. இதற்கு கடந்த கால சோதனைகளே அத்தாட்சி.
உங்களுக்கு திமுக அமைச்சர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார்களா?

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள், ரூ.127 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு, குட்கா வழக்கு நிலுவையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் எத்தனையோ சோதனைகள் நடந்தன. அதில் ஏதாவது முடிவுகள் வந்ததா? & திமுக தரப்பில் எழுப்பப்படும் இந்தக் கேள்விக்கு யார் பதில் சொல்வது? என்ன பதில்?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் உத்தம புத்திரர்கள் என்பதாக நினைத்துக் கொண்டு விசாரணைக்கு அனுமதி தராமல் தாமதம் செய்வது யார், ஏன்? பொன்முடியை குறிவைப்பதற்கு காரணம் ஆளுநர் ரவிதான் என்பது திமுகவின் குற்றச்சாட்டு.

கொள்கை ரீதியாகவும், அரசு ரீதியாகவும் துணை வேந்தர் நியமனம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றை ஏற்கவில்லை. சித்தாந்த ரீதியாக ஆளுநரை தொடர்ந்து எதிர்த்தவர் பொன்முடி. போனவாரம் ஆளுநர் டெல்லி சென்றார். அடுத்த வாரம் அமலாக்கத்துறை வருகிறது.

2007 இல் நடந்த வழக்கிற்கு 2023 ல் எந்த ஆதாரத்தை தேடுகிறீர்கள். என்ன கிடைக்கும்? 10 வருடம் கழித்து ஆவணம் தேடினால் கிடைக்குமா? அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என கோடிக்கணக்கில் சொத்தை கைப்பற்றியதாக அமலாக்கத்துறை தேர்ந்தெடுத்த தகவல்களை கசியவிடுகிறது.

அமலாக்கத்துறையிடம் அதிகாரப்பூர்வமாக ஏதாவது ஒரு தகவல் வந்ததா? பெயரை கெடுக்க வேண்டும். திமுக அரசு மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்று திமுக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், வழக்கை பொன்முடி சட்டப்படி சந்திப்பார். கிஞ்சித்தும் கவலைப்பட மாட்டோம் என ஓங்கிய குரலில் பதிலடி கொடுத்து விட்டுத்தான் பெங்களூரு சென்றிருக்கிறார். ஆளுநரும் அமலாக்கத்துறையும் திமுகவிற்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஓர் உண்மையை மு.க.ஸ்டாலின் சொல்லி இருப்பதும் உற்று நோக்கத்தக்கது.

ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தமிழ்நாட்டு வாக்காளர்களின் மனத்தில் உதய சூரியன் சின்னத்தை அழிக்க முடியாத ஓவியமாக பதித்து வருகின்றன என்பது தான் அதன் உள் அர்த்தம்.

ஆக, பொன்முடி வீட்டில் சோதனை நடந்திருப்பது அமலாக்கத்துறை மூலம் திமுகவுக்கு விடப்பட்ட ஒன்றிய பாஜக அரசின் நேரடி மிரட்டல். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதை எப்படியாவது சீர்குலைத்து விடவேண்டும் என்பதே ஒன்றிய பாஜக அரசின் நோக்கம்.

இது தான் அமலாக்கத்துறை சோதனையாக உருவெடுத்துள்ளது என்பது மக்கள் மனதில் பதிவாகி வருகிறது. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என அமைச்சர் துரைமுருகன் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

அடுத்து என்ன நடக்கப் போகிறதோ, பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img