மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் பலாத்கார கொலையை தற்கொலை எனக் கூறி மூடி மறைக்க மருத்துவமனை நிர்வாகமும் மம்தா பானர்ஜி அரசும் கொல்கத்தா போலீசாரும் முயன்றிருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதனை மெய்ப்படுத்தும் விதமாக நடந்த சில தவறுகள் சுட்டிக்காட்டப்படுகிறது.
பெண் மருத்துவரின் உடலைப் பார்க்க அவரது பெற்றோரை சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்துள்ளனர். மேலும், விசாரணை நடக்கும்போதே அவசர அவசரமாகப் பெண் மருத்துவரின் உடலைத் தகனம் செய்துள்ளனர்.
விசாரணை நடக்கும் போதே சம்பவம் நடந்த ஆர்ஜி கர் மருத்துவமனை செமினார் ஹால் அருகே இருந்த கழிப்பறை சுவர் அவசர அவசரமாகப் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆதாரங்களை அழிக்கவே இந்த பணி உடனடியாக நடந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சம்பவத்தைத் தற்கொலை என்று மூடி மறைக்க முயன்ற ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மீது இதுவரை எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அடுத்து இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் நடந்த போது அதை மேற்கு வங்க அரசு மிக மோசமாகக் கையாண்டது. மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது அவர்களை அழைத்துப் பேசாமல், அவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று மறைமுகமாக அம்மாநில அரசு அழுத்தம் கொடுத்தது.
இதற்கிடையில் மம்தா நடத்திய போராட்டம் மிகப் பெரிய விமர்சனத்தைக் கிளப்பியது. உரிய நடவடிக்கை எடுக்காமல் போராட்டம் நடத்தி சம்பவத்தைத் திசைதிருப்ப மம்தா முயல்வதாக உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோர் உட்பட பலரும் குற்றஞ்சாட்டினர்.
தாமாக வழக்கு விசாரணையைக் கையிலெடுத்த உச்சநீதிமன்றம் மேற்கு வங்க அரசையும் காவல்துறையினரையும் கடுமையாகச் சாடியது.
தற்போது இந்த வழக்கு விசாரணை, கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சிபிஐ வசம் சென்றுள்ளது. மொத்தம் 25 பேர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
சம்பத் மீனா மற்றும் சீமா பகுஜா போன்ற திறமை வாய்ந்த அதிகாரிகளை சிபிஐ களமிறக்கி உள்ளது. முதற்கட்டமாக கைதான சஞ்சய் ராயை காவலில் எடுத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த வழக்கில் விரைவில் உண்மை வெளிவரும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோருக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும்!