Homeதலையங்கம்ஜெயலலிதா பெயரில் பயணம்: சசிகலா எண்ணம் ஈடேறுமா?

ஜெயலலிதா பெயரில் பயணம்: சசிகலா எண்ணம் ஈடேறுமா?

கடந்த ஜூலை 8-ம் தேதி, முன்னாள் அமைச்சர்கள் 6 பேர், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற (சசிகலா, ஓபிஎஸ் உள்பட) அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியானது. தற்போதைய அதிமுக ஆலோசனை கூட்டங்களிலும் அதே கோரிக்கை எதிரொலித்தது. ஆனால் அதனை ஏற்க எடப்பாடிபழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இந்த நிலையில் தான் தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிட அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’’ எனும் பெயரில் வரும் 17-ம் தேதி தென்காசியில் இருந்து தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார் சசிகலா. ஆனால்,அனைவரையும் ஒன்றிணைக்கவேண்டும்’’ என அதிமுகவில் தற்போது எழுந்திருக்கும் புகைச்சலை பயன்படுத்திக்கொள்ளவே சசிகலா இந்தத் திட்டத்தை வகுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நான்காண்டு சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா,ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போதே சில முக்கியமான அதிமுக தலைவர்கள் அவரைச் சந்திக்கப்போகின்றனர் என்கிற தகவல்கள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒருசில அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகளை மட்டுமே சந்தித்தார்.

தொடர்ந்து, அக்டோபர் 26-ம் தேதி சென்னையிலிருந்து அ.தி.மு.க கொடி கட்டிய காரில் தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் சசிகலா. பசும்பொன்னுக்குச் சென்று முத்துராமலிங்கத் தேவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தஞ்சையில் தன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்தார். சிறிது இடைவெளிக்குப் பிறகு 2022 ஏப்ரல் மாதம் மீண்டும் ஆன்மிகப்பயணத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து, 2022 டிசம்பர் மாதத்தில், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் சசிகலா. ஆனால், பெரியளவில் அவருக்கான ஆதரவு கிடைக்கவில்லை. தொடர்ந்து, 2023 ஜூலை மாதம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போதும் பெரியளவில் அவருக்கான ஆதரவு கிடைக்கவில்லை. அதோடு, கொடநாடு பயணம், புதிய வீட்டுக்குக் குடியேற்றம் என பல நிகழ்வுகள் நடந்தபோதும் எதுவும் நடக்கவில்லை.

ஆனால், இந்தமுறை சசிகலாவின் சுற்றுப்பயணம் இதற்கு முன்புபோல் இருக்காது. இப்போது நிலைமையே வேறு – அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதால் நிச்சயமாக ஒரு மாற்றம் இருக்கும் என்றே அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். சசிகலாவும் அந்த மாற்றத்திற்காகத் தான் காத்திருக்கிறார்.

கடந்த காலங்களைப் போலவே சசிகலாவின் சுற்றுப்பயணம் வெற்றுப்பயணமாகப் போகுமா, இல்லை வெற்றிப் பயணமாக மாறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img