fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் மரம் விழுந்து சுற்றுலா பயணி பலி : செய்தித்துறை அமைச்சர் நேரில் அஞ்சலி

நீலகிரியில் மரம் விழுந்து சுற்றுலா பயணி பலி : செய்தித்துறை அமைச்சர் நேரில் அஞ்சலி

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மரம் விழுந்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி செல்வன் ஆதிதேவ் என்பவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உயிரிழந்த சுற்றுலாப் பயணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் கனமழை பெய்தும் மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. இதனை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று பல்வேறு தகவல்களை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இருந்தபோதும், கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக உதகை வட்டம், சோலூர் வட்டம், கிளன்மார்கன் 8-வது மைல் பகுதியில் மரம் விழுந்ததில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி செல்வன் ஆதிதேவ் என்பவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த சுற்றுலாப்பயணியின் உடலுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. துரிதமாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை காரணமாக இதுவரை 2 நிவாரண மையங்களில் மட்டுமே குறைந்த அளவிலான பொதுமக்கள் தங்கியுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் தொடர்ந்து, பத்திரிக்கைகள், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பல்வேறு வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், நேற்றைய தினம் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பைன் பாரஸ்ட் பகுதியில் பலத்த காற்றின் காரணமாக மரம் விழுந்து உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மழை மற்றும் காற்றின் வீரியத்தை உணர்ந்து, அநாவசியமாக வெளியில் சென்று வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழையினால், மாவட்டத்திலுள்ள பைன் பாரஸ்ட், படப்படிப்பு பகுதி, பைக்காரா, உதகை படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்படுகிறது. இந்த இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும்.


மேலும், அருகிலுள்ள கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்திலுள்ள எல்லையோர 3 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களிடம் நமது மாவட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் மூடப்பட்டுள்ள சுற்றுலாத்தலங்களின் விவரங்கள், அவசர கால தொடர்பு அலைப்பேசி எண்கள் ஆகியவை குறித்து தெரிவித்துள்ளோம்.

அதனை அந்தந்த உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கனமழை மற்றும் காற்றின் காரணமாக நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை ஏறத்தாழ 13 மரங்கள் விழுந்துள்ளது. விழுந்த மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும், போக்குவரத்து சீர் செய்யும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், உதகை ஊராட்சி ஒன்றியம், இத்தலார் ஊராட்சி, அழகர் மலை நிவாரண முகாமில் தங்கியுள்ள 26 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான கம்பளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், அதேபோல் தலையாட்டு மந்து பகுதியிலுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 நபர்களுக்கு பிரட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கி, அங்கு செயல்பட்டு வரும் மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின்போது, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், கண்காணிப்பு அலுவலர் லலிதா, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி, உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், உதகை நகராட்சி ஆணையாளர் வினோத், நகராட்சிப் பொறியாளர் சேகரன், உதகை நகர்நல அலுவலர் மரு.சிபி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.முருகேசன், உதகை வட்டாட்சியர் சங்கர்கணேஷ், உதகை நகரமன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img